Saturday, December 3, 2011

பிச்சைக்காரன்அவன்! மரியாதை இல்லாமல் தெரிந்தாலும் அவனை அப்படி குறிப்படுவதுதான் சரி. அவன் மேல் இருக்கும் அந்த ஈன உணர்வு தான் அவனுடைய பலம்.

ஆதவனை நம்பி ஆயிரம் கோடி பேர் இருந்தாலும் தன் முதல் ஒளியை அவனிடம் அனுப்பி அவன் முகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த பின் தான் மற்றவருக்கு தன் ஒளியைக் கொடுக்கிறான்.

அவனது வீடு விலாசம் இல்லா விசால எல்லையுடையது. எண்ணிக்கை இல்லா அறைகள். ஒரு இரவு அவன் தூங்கிய அறையில் அடுத்த நாள் அவன் நுழையும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு!

துயில் கலைத்து, தன் காவல் நாய்களை அப்புறப்படுத்திய பின் தன் உத்தியோகமான உதவி வேண்டுதலை செய்ய தன் முதலாளிகளை தேடிச் செல்ல ஆயத்தம் செய்கிறான். தன் வேண்டல் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் எப்போதும் சோகமுகத்துடனும் அழுக்காடைகள் உடனும் இரத்தலைத் தொடங்குகிறான்.

காலை உணவு தேவையென வயிறு அவனிடம் இரந்தபின் வசந்தம் உணவகம் நோக்கி தன் பயணத்தை செலுத்துகிறான். இந்த தெருவுக்கே முதலாளியான இவனைக் கண்டவுடன் உணவக முதலாளி கல்லாவுக்கு வரவு இல்லாமல் வந்த இந்த வாடிக்கையாளனுக்கு ஒரு பொட்டலம் மடித்து தயாராகவே வைத்திருக்கிறார்.

சிற்றுண்டி உண்டவுடன், அகிலத்தை ஆளும் ஈசன் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி அவன் பயணம் தொடர்கிறது. ஆலயத்துக்கு செல்வது படமாடும் தெய்வத்தை வேண்டி தன் துன்பம் விலக்க அல்ல. நடமாடும் தெய்வங்களை ஈந்து தன் தனம் பெருக்க. உலோகம் ஓட்டை உரசுகிறது

மனகனத்தை இறக்கி வைத்தவர் இவன் கனத்தை ஏற்றிய பின் கனம் அனைத்தும் தன் மீது கொண்ட ஈசன் மதிய துயில் கொள்ள வேண்டுவதால் அங்கிருந்து நகர்ந்து அன்னப்பூரணி உணவகத்தை அடைகிறான். கண்டவுடன் அனைவரும் விலகி ஒதுங்க கல்லாப் பெட்டியின் பாதுகாவலர் அலுப்புடன் இவனை நோக்க தன் தலை சொறிந்து இறை தரிசனத்தை நெடுநேரம் கொடுத்தபின் அன்னலஷ்மி இவனுக்கும் அருள் பாலிக்கிறாள்.

அன்னலஷ்மியையும், தனலஷ்மியையும் தன் கிழிந்த கிழியாத என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் இருக்கும் தன் துணி கஜானாவில் பாதுகாத்து வளநாடு பூங்காவுக்கு உலா செல்கிறான். அன்னலஷ்மியை தரிசித்துவிட்டு, தன் தனத்தையெல்லாம் சரிபார்த்தபின் அருகில் இருக்கும் அந்தப் பேருந்து நிலையம் நோக்கி அவன் கால்கள் செல்கின்றன.

அலுவல்கள் முடித்து வீடு திரும்பும் மக்களிடம் சோர்ந்த விழிகாட்டி, கிழிந்த உடைகாட்டி அவர்கள் மனிதநேயத்தை உரசிப்பார்க்கிறான். 

உலோகத்தின் சங்கீதம் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மனிதத்தை போதுமளவு என்று நோக்கியபின் மீண்டும் ஈசன் வீட்டின் வாசலுக்கே வருகிறான். ஈசன் உண்டி நிரப்பி வெளிவருவோர் சிலர் இவன் உண்டிக்கும் உதவுகின்றனர். ஆண்டவன் அருள் விற்று வியாபாரம் மூடிய பின், பீடி வியாபாரம் செய்யும் கடைக்குச் சென்று அவன் வியாபாரத்துக்கு உதவுகிறான். இங்கு அவன் சோர்ந்த விழிகளோ, கந்தலாடையோ, சுருங்கிய தேகமோ, அவன் சிரிப்பில் தெரியும் இறைவனோ உதவவில்லை. உலோகமும் காகிதமும் தான் உதவுகின்றன. வாழையிலைக்குத் தான்  வாழ்த்துக்கள் தேவை புகையிலைக்கு எதற்கு புண்ணியமெல்லாம்?

இவன் வீட்டின் உச்சியில் இரவு வெளிச்சத்துக்கு தொங்கவிடப்பட்டிருக்கும்
சந்திரனும் நட்சத்திரங்களும் ஒருங்கே ஒளி வழங்க ஈன்ற செல்வத்தைக் கொண்டு வாங்கிய சாராயத்தையும் குடித்து விட்டு அடுத்த நாளைக்கான அலுவல்களை மனதில் அசைப் போட்டபின் நித்ரா தேவியிடம் சரண் புகுகிறான் அந்தப் பிச்சைக்காரன்.

3 comments:

 1. திருமாறன்.திDecember 3, 2011 at 5:30 PM

  அசத்திபுட்டீங்க நட்டு.நல்ல வார்த்தை தேர்வு,நடை.இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. கலக்கிட்ட நட்ராஜ்/// நல்லா இருக்கு

  ReplyDelete
 3. "இவன் வீட்டின் உச்சியில் இரவு வெளிச்சத்துக்கு தொங்கவிடப்பட்டிருக்கும்
  சந்திரனும் நட்சத்திரங்களும் " நல்லாருக்கு ;-)

  ReplyDelete

வாங்க பழகலாம்