Monday, October 31, 2011

பல்லி
”டேய்! இன்னிக்காவது சீக்கிரம் எழுந்து வீட்டு வேலையை கொஞ்சம் பாருடா. நடுராத்திரி வரைக்கும் அந்த கம்ப்யூட்டர் பெட்டி இல்லைனா செல்போன்.”

வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் லட்சார்ச்சனை இன்று ஏன் வைகறையான 8 மணிக்கெல்லாம் தொடங்கியது என்ற என் கேள்விக்கு பதில் பாகிஸ்தான் குண்டு வெடிப்புக்கு பிறகு வரும் கண்டன அறிக்கைப் போல பறந்து வந்தது.

”ஆயுத பூஜை வேற வருது இப்பவாவது சுத்தம் பண்ண ஆரமிச்சா தான் சரியா இருக்கும்.”

”எந்திரிச்சு பல்ல தேய்டா முதல்ல அதுக்குள்ள செல்போன்”.

“என்னம்மா இப்ப அவசரம்? ஞாயிற்றுக்கிழமை தானே ஒரு நாள் நிம்மதியா தூங்கவிடமாட்டியா?”

இப்படித்தான் அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலை புலர்ந்தது. அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த அந்த ஐம்பது கிலோ ரசகுல்லா Facebookஇல் எனது friend request அங்கீகரித்த அடுத்த நாள் இப்படியா தொடங்க வேண்டும்? நம்பர் வேற வாங்கியாச்சு! எப்படியாவது இன்னிக்கு முதல் முதலில் போனில் பேசிவிடவேண்டும் என்ற எண்ணத்தை உடைத்தது அடுத்த அணுகுண்டு.

“என்னடா அந்த செல்போன பார்த்து சிரிச்சுகிட்டு இருக்க?” அம்மாவின் அதட்டலோடு பல் துலக்கி காலண்டரில் சிரித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு என்றும் ருசி மாறா அம்மா காபியைக் குடித்துவிட்டு மறுபடியும் facebookஇல் நுழைந்தேன்.

என் அம்மாவுக்கு அவள் மருமகளை பார்க்க ஆசை இல்லைப் போல. குளிக்கப்போகுமாறு உத்தரவு வர துண்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தபோதுதான் செய்தித்தாள் கண்ணில் பட்டது.

“எம்.பி எம்.எல்.ஏவை திரும்பி அழைக்கும் முறை நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விசயம்” – தலைமை தேர்தல் அதிகாரி. என் நினைவெல்லாம் இப்போது அரசின் கையாலாகத்தனம் நோக்கித் திரும்பியது. என் வீட்டு வேலைக்காரன் சரியாக வேலை செய்யாத போது எனக்கு அவனை நீக்க உரிமையில்லா தன்மையை என் கையாலாகத்தனம் என்று சொல்வதே சரி.

”ஒன்னு செல்போன், இல்ல எதாவது புஸ்தகம் இப்போ குளிக்கப் போரியா இல்லையா?”

அம்மா பேப்பராவது படிச்சுட்டு போரேன். இரும்மா என்றபடி நேற்று நாட்டில் நடந்த திருட்டு, கொலை, கொள்ளை, சட்டமாக்கப்பட்ட கொள்ளை (அதாங்க அரசியல் செய்திகள்) எல்லாம் பார்த்துவிட்டு குளியலறையில் நுழைந்தேன். ஷவரைத் திருகிய போது தண்ணீர் வரவில்லை. கடுப்பில் அம்மாவென கத்த, என் கடுப்பை எதிர்பார்த்தது போலவே டேய் ஷவர் ரிப்பேர் ஒழுங்கா பக்கெட்டில் குளித்துவிட்டு வா என அம்மாவின் குரல் பாத்ரூம் கதவை ஊடுருவி வந்தது.

“என்ன வாழ்க்கை டா இது? காலையில் எழுந்தா facebook பார்க்க முடியல, பேப்பர்ல நல்ல செய்தி இல்லை, ஷவர் வேலை செய்யல என்ற எண்ண அருவியிலும் குளித்து வெளிவந்தபோது அதை விட ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அம்மா துடைப்பமும் கையுமாக ஒரு சாக்குப்பையை நிரப்பிக் கொண்டிருந்தார். அதிலென்ன அதிர்ச்சி என்பவர்களுக்கு அம்மா அந்த நீல சாக்குப்பையை எடுத்தால் அன்று முழுவதும் என் நாள் சமையல் அறை மேலிருக்கும் பரணிலோ இல்லை மொட்டை மாடியில் இருக்கும் தேவையில்லா பொருட்கள் போடும் அறையிலோ தான் கழியும். அதுவும் ஆயுத பூஜை நேரம் வேறு. இந்த ஞாயிற்றுக் கிழமை காலிடா எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டே தோசையையும் கொத்துமல்லி சட்னியையும் உள்ளே தள்ளினேன்.

ரமணன் அவர்களது வானிலை கணிப்பு மாதிரி இல்லாமல் என் கணிப்பு மிகச்சரியாக வேலை செய்தது. ”இன்னிக்கு ஒழுங்கா வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தினாதான் ஆயுத பூஜைக்கு நிம்மதியா இருக்கலாம். அதனால ஒழுங்கா அந்த சந்தன கலர் ஷார்டச மாத்திட்டு ஏதாவது டார்க் கலர்ல ஏதாவது ஒன்ன மாட்டிகிட்டு சீக்கிரம் மொட்டை மாடி ரூமுக்கு வந்துடு” என்று சொல்லியபடியே அம்மா மேலே போனாள்.

நானும் முதலமைச்சரின் கார் பின்னே செல்லும் பாதுகாப்பு கார் போலவே அம்மாவின் பின்னாடி சென்றேன். இரு மணி நேரங்கள் தூசியோடு போரட்டம் நடத்தி இரண்டு சாக்கு நிறைய குப்பையை தெரு முனையில் கொட்டிய பின் ஒரு பழரசம் வந்தது. அம்மாவுக்கு உழைப்பதன் பலன் இதுதான். அவ்வப்போது எதிர்பாராத வாயூட்டு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

“எம்மா எம்மா காதல் பொன்னம்மா. நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ள காயமாச்சம்மா பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா” என சூர்யா அலைபேசியில் இருந்து பாடினார்.

சே! எத்தனை தடவை பட்டாலும் காதலுக்கு மட்டுமில்லை இந்த செல்போனுக்கும் புத்தி வருவதே இல்லை. ஒழுங்கா சட்டைப்பையில் வைப்பதே இல்லை. எங்காவது வைத்துவிட்டு எங்கையோ தேடுவது காதலை மட்டுமல்ல செல்போனையும் தான். ஒரு வழியாக சூர்யாவின் பாட்டை பச்சை பட்டனின் துணைக்கொண்டு நிறுத்தி “ஹலோ” என்றேன்
மறுமுனையில் முன்சொன்ன நடமாடும் நட்சத்திரம் “ஹேய்! நான் தான்! எப்படி போகுது Weekend” என்று பாடினாள்.

உன்னைப் பார்க்காம என் life end ஆகிவிடும் போல இருக்கு என சொல்லவந்து சொல்லாமல் “ஆயுத பூஜைக்கு வீட்டை தயார் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா பெண்டு கழட்டுராங்க” என்றேன்

“ஹா ஹா ஹா” என்று சிரித்தபோது தலையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்தால் கட்டிடத்தின் உச்சி. சே ஒரு சிரிப்பில் என்னை மிதக்க வைத்துவிட்டாளே என்ற நினைத்த போது அவள் சிரித்து முடித்தாள். அவள் ஈர்ப்பு சென்று புவியீர்ப்பு திரும்பியது நானும் நிலத்துக்கு திரும்பினேன்.

“என்ன திடீரென்று கால்” நான்.

“ஏன் பண்ணக் கூடாதா?” அவள்

“டேய் இந்த குப்பையக் கொட்ட சொன்னா அங்க என்னடா செல்போனில் அரட்டை” அம்மா.

“அம்மா ஒரு ஐந்து நிமஷம் பேசாமல் இரு” என்றபடி வெளியே சென்று உன் நம்பர் இருப்பதால் தானே இந்த செல்போனுக்கு உயிரே இருக்கு நீ கூப்பிடாம எப்படி என வழக்கம் போல் சொல்ல நினைத்து சொல்லாமல். 

“ஹே! அப்படி எல்லாம் இல்ல. தீடீர்னு கூப்பிட்டல்லே அதான்…..”
“ஒன்னும் இல்ல! Office laptopஇல் என் வீட்டு broadband connect செய்யவேண்டும். Customer care கூப்பிட்டால் சரியான ரெஸ்பான்சே இல்லை. அதான் உனக்குத் தெரியுமா எனக் கேட்க கூப்பிட்டேன் என்றாள்.”
உன் இதயத்துக்கும் என் இதயத்துக்குமே இணைப்பு கொடுக்கப் போறேன் laptopக்கும் broadbandக்கும் இணைப்பு கொடுக்க மாட்டேனா என்ற mind voiceஐ அப்படியே கட் செய்து அப்படியே போனிலையே அவ்வப்போது வழிந்து, ஐந்து நிமிடம் சொல்லவேண்டிய வழிமுறையை 15 நிமிடம் இழுத்தேன். பேசி முடித்து மதிய சாப்பாடு மெனுவும் விசாரித்து ஒரு வழியாக ஞாயிற்றுக் கிழமை பிரகாசமாக மதிய நேரத்தை எட்டியது.

மீண்டும் உள் நுழைந்து நான்கு முறை சாக்கை நிரப்பி, தெருமுனைக்கும் என் வீட்டுக்கும் நடந்து வழியில் முறைத்துப் பார்த்த தெருநாய்க்கு பயந்தும் பயப்படாமல் வீடு திரும்பினேன்.

அம்மாக்கள் எல்லாம் எப்படித்தான், எங்கிருந்துதான் Multi tasking கற்றார்களோ தெரியவில்லை என்னோடே மொட்டை மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த அம்மா. மதியம் ஒன்றரை மணிக்கு மிகச் சரியாக சமையலை முடித்திருந்தாள். சாப்பிட்ட பின் சோனி பிக்சில் “Stardust” படம் பார்த்திருந்தேன். ஏற்கனவே இரு முறை பார்த்த படம் என்றாலும் மூன்று முறை அம்மா கூப்பிட்டது நான்காவது முறையாக என் காதில் விழுந்தது.
”டேய் மழை பெய்தால் அந்த சாமி அறை ஜன்னல்ல தண்ணீர் சொட்டுது இரண்டு மாசம் தான் ஆகுது அதுக்கு பலகை அடித்து. அதையும் கொஞ்சம் பாருடா” என அம்மா அன்பை சரியான இடத்தில் கலந்து மிக்சராக கொடுத்தாள். கடுப்பில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சென்றேன். அந்த அறைக்கு சாளரம் இருக்ககூடாதாம். அதனால் அதை சாத்தியே வைத்திருந்தார்கள் இருந்தாலும் வாஸ்து படி அதை அடைக்கவேண்டும் என்பதால் நான் ஒரு பலகையை வைத்து ஆணி அடித்துவிட்டேன். இப்போது அதன் வழியாக தண்ணீர் வருகிறது. பலகை நகர்ந்திருக்க வேண்டும். மீண்டும் ஆணி சுத்தி எடுத்துக்கொண்டு என் வீட்டு கடவுள் வாழும் அறையை நோக்கி சென்றேன்.

சாளர கதவை திறந்துப் பார்த்தேன். பலகை தண்ணீரால் அரிக்கப்பட்டிருந்தது. அதை எடுக்க ஒவ்வொரு ஆணியாக தட்டி எடுத்துக்கொண்டே இருந்த போதுதான் அது என் கண்ணில் பட்டது. என் உள்ளங்கையை விட நீளம் அதிகம் இருக்கும். இரு இன்ச் அகலம். கருப்பு கண்கள். மரக்கட்டை போன்ற உடல். மேலே இறைவன் வரைந்த மார்டன் ஆர்ட். பல்லி. என்ன ஆச்சர்யம் அவ்வளவு அருகில் நான் கையை கொண்டு சென்றும் அசையாமல் நின்றது. ஏதோ ஒரு அசைவு நிகழ்ந்தாலும் அது நகரவே முயற்சிக்கவில்லை. ஒரு வேளை அமெரிக்காவின் ஆதரவுப் பல்லியோ இப்படி அஞ்சாமல் நிற்கிறதே என எண்ணியப்படி “சூ” என்றேன் அப்படியும் நகரவில்லை. குழப்பத்தில் உற்று நோக்கியபோது தான் தெரிந்தது அதன் கால் எதிலோ சிக்கி இருந்தது.

ஓடிச் சென்று ஒரு டார்ச் எடுத்து வந்து வெளிச்சம் பாய்த்திய பின் தான் தெரிந்தது அதன் கால் எதிலோ மாட்டி இருக்கவில்லை. ஆணியால் பலகையில் அடிக்கப்பட்டிருந்தது. அட! நான் அந்த ஆணி அடித்து இரு மாதங்கள் ஆகி இருக்கும். அது எப்படி ஆணி அடிக்கும் போது அங்கு வந்தது என்ற கேள்வியை விட எப்படி இன்னும் இந்தப் பல்லி இரு மாதங்கள் உயிரோடு இருக்கிறது? என்ற கேள்விதான் தலையைக் குடைந்தது.

சரி ஒரு மணி நேரம் பார்ப்போம் என்றபடி “Angry birds”ஐ திறந்தேன். அம்மா மதியத் தூக்கத்தில் இருந்து விழிக்க எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அது வரை பார்க்கலாம் எதுவும் விடை கிடைக்கவில்லையெனில் ஆணியை எடுத்து பல்லியை விடுவித்து விடலாம் எனத் திட்டம்.
ஐந்து நிமிடம் தான் கழிந்திருந்தது. அந்த இருளடைந்த மூளையில் இன்னொரு அசைவு தெரிந்தது. டார்ச் அடித்தால் பிரச்சனை என்று என் செல்போனை அந்த இடுக்கில் காட்டினேன். கிட்டதட்ட அதே போன்ற இன்னொரு பல்லி. அட எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. இல்லையே இன்னும் வெளிச்சத்துக்கு வந்த போது. காலில் குண்டு பாய்ந்த (சே தமிழ் படம் பார்த்து கெட்டுப்போயிட்டேன்) ஆணி பாய்ந்த பல்லியை விட சற்று பருமனும் குறைவு. நிறமும் கம்மி. வேற மார்டன் ஆர்ட் உடலில். வாய் சற்று உப்பி இருப்பது போல் இருந்தது. வாயில் குற்றுயிரும் கொலை உயிருமாய் ஒரு கரப்பான்.

அட! என்ன ஆச்சரியம். எடுத்து வந்த கரப்பானை பாதி மட்டும் விடுவித்தது. தனக்கு விடுதலை என நினைத்த கரப்பான் வெளியில் தெரிந்த இரு கால்களை பின் நோக்கி வைத்த போது மிகச் சரியாக அது அடிபட்ட பல்லியின் வாயில் வைத்தது. மிக லாவகமாக வாயாண்டது அடிபட்ட பல்லி. முழு கரப்பானும் இதன் வாய்க்கு சுவிஸ் பாங்கில் பணம் கணக்கில் மாறுவது போல வாய் மாறியது. எப்படி இரு மாதங்கள் இந்தப் பல்லி உயிரோடு இருந்தது என இப்போது புரிந்தது எனக்கு.

எத்தனை நாட்கள் விடுதலை என மாட்டிக்கொண்டிருந்த பல்லிக்கு தெரியாது. எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு வரவேண்டும் என அந்தப் பல்லிக்கும் தெரியாது. ஆனால் அது இந்தப் பல்லியின் மன உறுதியும் குலையவில்லை அந்தப் பல்லியின் விடாமுயற்சியையும் குறையவில்லை. ஒரு வேளை இது தாய் மகனாக இருக்குமோ? இல்லை கணவன் மனைவியாக இருக்குமோ? ஆண் பல்லி எது பெண் பல்லி எது என்றெல்லாம் கண்டுபிடிக்கும் திறமை எனக்கில்லை. ஆனால் இறைவனின் படைப்புகள் தாம் எவ்வளவு விசித்தரமானவை?

ஒரு வழியாக அதன் உணவை முடித்த பின் எல்லா ஆணிகளையும் எடுத்தபின் அந்தப் பல்லியின் காலின் ஒரு பகுதி கீழே விழுந்தது. மீதி இருக்கும் தன் உடலின் பாகங்களையும், என் ஆச்சர்யங்களையும் சுமந்து கொண்டு தாவி ஓட முடியாததால் தவ்வி ஓடியது. மீண்டும் பலகையை அடித்தேன் எந்த இடைவெளியும் இல்லாமல். பல்லி எதுவும் மாட்டிக்கொள்ளவில்லை இரு முறை சரி பார்த்துக் கொண்டேன்.

வந்து கணிப்பொறியை இயக்கினேன். வழக்கம் போல் முதலில் facebook அட அவளின் பேருக்கு மேல் பச்சை பல்ப். ஆன்லைனில் இருக்கிறாள். நான் என்ன செய்யலாம் என்று பார்த்திருந்த போதே “hi” என்று அவள் பெயர் போட்டு ஒரு Pop up.

”டேய்! மாடி ஏறி இறங்கினது கால் வலிக்குது. போய் பாலும் bru பாக்கெட் ஒன்றும் வாங்கிட்டு வாடா” அம்மா.

இம்முறை நான் brb என டைப்பிவிட்டு மானிட்டரை அணைத்துவிட்டு எழுந்த போது என் புருவங்களில் சுருக்கம் இல்லை. மாறாக என் உதட்டில் ஒரு புன்னகை இருந்தது.

”சட்”

“சட் சட்”

”சட் சட் சட்”

எங்கோ பல்லியின் அந்தக் குரல் கேட்டது.

Disclaimer: இது ஒரு ஆங்கில கதையையும் லக்கி கிருஷ்ணா அவர்களின் பதிவு ஒன்றையும் படித்து கலந்து அடித்து எழுதியதே. இரண்டுக்குமான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

6 comments:

 1. Arunagiri MurugerganOctober 31, 2011 at 9:51 PM

  I started admiring ur writings.. Big kudos..

  ReplyDelete
 2. முதல் பாதி கொஞ்சம் மெதுவா போனாலும், ரெண்டாவது பாதி கலக்கல்!
  //வாயூட்டு// சொற்பயன்பாடுகளும், உவமைகளும் அருமை. அம்மா பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.
  பல்லியின் பாசம் புள்ளரிக்கவைத்துவிட்டது!:)

  ReplyDelete
 3. அருமையான பதிவு.. எழுத்து நடை நல்லாயிருக்கு.. மேலும் நிறய எழுதுங்கள்.

  ReplyDelete
 4. //சட்டமாக்கப்பட்ட கொள்ளை (அதாங்க அரசியல் செய்திகள்)//

  //எங்காவது வைத்துவிட்டு எங்கையோ தேடுவது காதலை மட்டுமல்ல செல்போனையும் தான்.//

  //எதிர்பாராத வாயூட்டு//

  //weekend - life end//


  இது போன்ற பல இடங்கள் சுவாரஸ்யங்கள்!

  நல்ல நடை. பல்லியைப் பற்றிய பத்தி ஆரம்பிக்கும் இடத்தில் சூடு பிடிக்கிறது!

  இவ்வளவுதான்.. எதையாவது பார்த்து படித்து வரும் இன்ஸ்பயரேஷனில் கொஞ்சம் கற்பனை கலந்து கட்டி அடித்தால் கதை ரெடி.

  ஆல் த பெஸ்ட் !!

  ReplyDelete

வாங்க பழகலாம்