Wednesday, October 26, 2011

பலூன்



நம் வாழ்க்கையில் அனைவரும் ஒரு கட்டத்தில் ஆசையாகவும் மற்றொரு கட்டத்தில் ஆயாசத்துடனும் பார்க்கும் ஒரு விசித்திர வஸ்து. கடவுளுக்கு அடுத்து பல நிறங்களிலும், பல வடிவங்களிலும் இந்த உலகில் பறந்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியும் கடவுள். நைட்ரஜன், ஹீலியம் என பல வாயுக்களால் நிரப்பப்பட்டாலும் நம் தெருக்களில் விற்கும் பலூன்கள் மற்ற இந்தியத் தயாரிப்புகள் போல கலப்படமாகவே உருவாகிறது. வாயுக்களின் கலப்படம் தானே காற்று?

மனிதன் ரப்பர் கண்டுபிடித்த பின் அதை மனமகிழ்ச்சிக்கும் பொழுதுபோக்குக்கும் இதை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்த டேவிட் ரப்பர்(நாமளா போட்டுக்க வேண்டியது தான்) நிச்சயம் பாராட்டுக்கு உரியவனே. எம்.ஆர் ராதா சொன்னது போல, நாம் நீராவியில் புட்டு சுட்டுக் கொண்டிருக்க, வெளிநாடுகளில் அவனவன் அதை பலூனில் நிரப்பி பறக்க விட்டுக் கொண்டிருந்தான். பலூன்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடுகளுக்கிடையே போக்குவரத்துக்குக் கூட பயன்பட்டுள்ளன. பாராசூட் கூட பலூனுக்கு ஒன்று விட்ட தம்பியாகவது இருக்க வேண்டும்.

இந்தப் பதிவில் அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பலூன்களில் பறக்கப்போவதில்லை. நாம் தற்போது வாங்கப்போவதும் ஊதப்போவதும் தெருக்களில் விற்கும் பலூன்களையே. தம்மாதுண்டு பலூன், கொஞ்சம் காற்று இதைப் பற்றி ஒரு பதிவு அவசியமா என்பவர்களுக்கு இந்த பலூனும், காற்றும் என் வாழ்வில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதை சொல்லும் பதிவே இது.
பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது இந்தியாவின் ஐந்தாண்டு திட்டம் தீட்டுவது போலவே பொம்மை தேர்வு செய்கிறார்கள். கீழ போட்டா உடையாதுல்ல, தண்ணியில் போட்டா கலர் போயிடாதில்ல, குழந்தை வாயில் வைத்தால் ஏதாவது ரசாயனம் கலந்து செல்லத்துக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என பல உத்தரவாதங்களும் உறுதிமொழிகளும் வாய்மாறுகின்றன.

என் தந்தை இதையெல்லாம் விட ஒருபடி மேல். பலூன் விற்பவனிடம் வெடிக்காத பலூன் கேட்டால் அவன் என்ன செய்வான்? கல்லால் பலூன் செய்தா கொடுக்க முடியும். இதனாலேயே பெரும்பாலும் பலூனுக்கு நான் கண்ணைக் கசக்கிகொண்டு நிற்பது அம்மாவிடம் தான்.
அன்றொரு நாள் அப்படி நடந்துதான் அந்த வீபரீதம்.

”டிர்க்”

”டிர்க் டிர்க்”

”டிர்க் டிர்க் டிர்க்”

தெருவில் பலூன் கைப்படி எழுப்பும் சத்தம் கேட்டவுடன் அந்த ஐந்து வயது நான், என் அம்மாவின் பயத்தம் பருப்பு டப்பாவின் சேமிப்பை கரைக்கத் தயாரானேன். என் மூன்று வயது தங்கையும் நினைத்ததை சாதிக்க கண் கசக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய பருவம்.
வழக்கமான பரங்கிக்காய் போல இல்லாமல் இது வேறு மாதிரி அதுவும் ஒரு வண்டியில் கட்டிப் பட்டு இருந்தன அந்தப் பலூன்கள். சிகப்பில் வெள்ளை, மஞ்சளில் பச்சை, வயலிட்டில் பழுப்பு என வண்ணஜாலம் காட்டும் பப்பாளி வடிவு பலூன்கள் ஒரு பேராபத்தை வரவழைக்கப் போகிறது என அறியாமல் என் அன்னையும் அந்த வண்டியை நெருங்கினாள்.

”என்னது ஒரு பலூன் ரூ 1.50 ஆ அநியாயமாய் இருக்கிறது?” என் அன்னை வாய் பிளந்து நிற்க..

“அம்மா இது நைட்ரஜன் பலூன் மத்த பலூன் மாதிரி சீக்கிரம் காத்து இறங்காது மெஷின் ஊதின பலூன் அதான் விலை ஜாஸ்தி” என வேதியியல் பாடம் தொடங்கிய அவனிடம் ரூ 2.50க்கு இரண்டு பலூன்கள் வாங்கினாள் என் அன்னை.

பரங்கிக்காய் வடிவிலே பார்த்து பழகிய எனக்கு, அந்தப் பப்பாளி வடிவ பலூன்கள் தான் அப்போதைய உலகின் முதல் அதிசயம். மஞ்சளில் பச்சை எனக்கும், சிவப்பில் வெள்ளை என் தங்கைக்கும் என முடிவாகி வாங்கிக் கொண்டு குவார்ட்டசில் நுழைந்தோம். “தங்கச்சி, இது வெறும் பலூன் இல்லம்மா, உன் அண்ணனோட உயிர் மூச்சு” என்று தங்கையை சமாதானப் படுத்தி ஒரு பலூனை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றேன். நான் வராண்டாவில் மிதக்கும் நீர்க்குமிழியை கையில் வைத்துக்கொள்ள, இரண்டு நிமிடங்கள் கரைந்திருக்கும். வீட்டினுள்ளே இருந்து டமால் என ஒரு சத்தம். நான் நினைத்தது போலவே என் இரட்டை தம்பி தங்கைக்கு வாங்கிய ஒற்றை பலூன் சண்டையில் வெடித்திருக்கவேண்டும். ஆனால் வழக்கமாக கேட்க வேண்டிய இரு அழுகைக் குரல்களுக்கு பதிலாக என் தம்பியுடைய குரல் மட்டுந்தான் கேட்டது. எட்டிப்பார்தேன். என் தங்கை அழவில்லை. அதற்கு பதிலாக அவள் வாயில் அந்த சிவப்பு பலூன் ஒரு மாதிரி ஒட்டி இருந்தது. வாயில் இருந்து ஒரு வெள்ளை திரவம் வந்து கொண்டிருந்தது. கொட்டிக் கொண்டு இருந்தது என சொல்லவேண்டும்.

”அம்மா! ராஜிக்கு என்னமோ ஆயிடுச்சும்மாஆஆஆ...என்று நான் கத்த. என் தம்பியின் அழுகுரல் கேட்டு நடந்து வந்த என் தாய், என் அலறல் கேட்டு பதறி ஓடி வர தங்கைக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. தங்கை வாயில் நுரை கண்டதும் என் அம்மா செய்வதறியாது பதறிப்போனார்.
பலூனை வாயில் வைத்து விளையாடி இருக்கிறாள். அப்போது ஏற்பட்ட ஏதோ அழுத்தத்தில் அது வெடித்து அதன் நைட்ரஜன் முழுவதும் அவள் நுரையீரலில் இறங்கி ஏதோ வேதியியல் மாற்றம் நடந்து நுரை வேறு வந்திருக்கிறது. வேதியியலில் P.hd வாங்கவில்லையென்றாலும் பலூனால் தான் ஏதோ விபரீதம் என்று மட்டும் அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
உடனே என் தங்கையை தோளில் தூக்கிக் கொண்டு என் தம்பிக்கு பக்கத்து வீட்டு அத்தையை காவல் வைத்து விட்டு, என்னை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமா நடையா என அறுதியிடுக் கூறமுடியாத ஒரு வேகத்தில் இரண்டு தெரு தள்ளி இருக்கும் மருத்தவமனையை அடைந்தாள்.

இவ்வளவு நடந்தும் வீபரீதம் அறியா நான் என் மஞ்சள் பலூனை இன்னும் கையிலேயே வைத்திருந்தேன். எப்படி அலுவலகத்தில் இருந்த என் தந்தைக்கு தகவல் போனது என இன்று வரை தெரியவில்லை அவரும் பதறி ஓடி வர நான் என் பலூனை பத்திரமாக டாக்டர் டேபிளுக்கு அடியே வைத்தேன்.

டாக்டரும் இன்னும் சில நர்சுகளும் என் தங்கையை படுக்கவைக்கப்பட்டு இருந்த அந்த அறைக்கு நான்கு முறை நடந்து சில மணி நேரங்கள் கடந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது. குழந்தை மயக்கத்தில் இருக்கிறது. இன்று ஒரு நாள் இங்கிருந்துவிட்டு நாளை அழைத்து செல்லலாம் எனக் கூறிய பின் தான் அம்மா அழுகையை நிறுத்தினாள்.
பலூனின் மொத்த கதையும் என் தந்தையிடம் கூறப்பட நான் முக்கிய குற்றவாளியானேன், “நடராஜா! வீட்டுக்கு போ, நீ செத்த” என்று மனதிற்குள் நினைத்தாலும் அம்மா அழுதால் நமக்கு அடி விழாது என்ற நம்பிக்கையில் டாக்டரின் அறைக்குள் நுழைந்து என் மஞ்சள் பலூனை எடுத்துக் கொண்டு திரும்பினேன் பிறகுதான் தெரிந்தது என் கணிப்பு எவ்வளவு தவறென்று. முதுகில் மின்சாரம் பாய்ந்தது. பலூன் பலவந்தமாக பறிக்கப்பட்டது. நைட்ரஜன் காற்றிலையே கலந்தது.

அதன் பின் பலூன் என்பது ஒரு கொலைக்காரக் கருவியாகவே என் வீட்டில் பார்க்கப்பட்டது. திருவிழாவில் என்னதான் அழகான கார், கைராட்டினம் என வாங்கினாலும். ற்றை நூலில் அவ்வளவு பெரிய காற்றடைத்த பலூனை பிடித்துக்கொண்டு நடக்கும் அந்த சந்தோசம் கடைசி வரை கிடைக்காமலே போனது.

                          --------18 வருடங்களுக்குப் பிறகு--------

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன், கிறிஸ்துமஸ் நெருங்கும் காலம். Bay Decoration பற்றி ஒரு கலந்துரையாடலில் பலூன் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என முடிவு செய்தார்கள். Bay முழுவதும் சிவப்பு நிறந்திலும் நீல நிறத்திலும் அழகான பலூன்கள். 18 வருடங்களுக்கு பிறகு முழுதாக ஒரு பலூன் என் கையில். ஆஹா என்னவள் தீண்டியிருந்தால் கூட அப்படி ஆனந்தம் வந்திருக்காது. கிறிஸ்துமசும் கடந்து போனது. அட! இன்னும் ஒரு மேஜையில் இருந்தும். கணிணியில் இருந்தும் பலூன்கள் நீக்கப் படவே இல்லையா?. யாருடைய மேஜை என்று சொல்லித் தெரியவேண்டுமா? மேலாளர் நீக்கச் சொல்லும் போது நான் சொன்னது.

”Why should I murder a balloon. Isn’t bursting out the air from a body called murder?”

இப்போதும் பண்டிகை ஒன்று வருகிறதென்றால் அலுவலகத்தில் என் மேஜையில் தான் முதலில் பலூன் கட்டப்படும் இறுதிவரை அவை சுவாசித்து கொண்டிருப்பது என் மேஜையில் தான்.

3 comments:

  1. நல்லா இருக்கு மச்சி... மீ த ஃபர்ஸ்ட்...

    ReplyDelete
  2. இத்தனை வயதாகியும் நீ குழந்தை..சிறு வயது நினைவுகள் சிக்கி கொள்கின்றன இதய சிறைக்குள்..அப்பறம் அந்த என்ன'அவள்' பத்தி அடுத்த பதிவு எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete

வாங்க பழகலாம்