Wednesday, April 4, 2012

இன்று எனக்கு பிறந்தநாள்
இன்று என் பிறந்தநாள்!

அவள் இதழ் ஒவ்வொரு மில்லி மீட்டராய் விரிந்து கொண்டிருக்கிறது!

நான் செத்து கொண்டிருக்கிறேன்!

இப்படித்தான் அந்த நிகழ்வை மூன்றே வரிகளில் சொல்ல வேண்டும். பத்தை இரண்டோடு கூட்டினால் வரும் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை முடித்த போது, பத்தோடு எட்டைக் கூட்டினால் வரும் பதினெட்டாம் வயதின் வாசலில் நின்றேன்.

மற்றவர்க்கு கோடை பிறந்தது. எனக்கு வசந்தம் பிறந்தது.

காலண்டர் ஏப்ரல் 4 என காட்டியது. ஆனால் இன்றைக்கு அழகாய் தெரிந்தது. வழக்கமாக இருக்கும் அதே முருகன் தான். அதே புன்னகைதான். அதே காகிதம் தான். ஆனால் இன்று மட்டும் இந்த நாட்காட்டியிடம் ஒரு நொடிக்கும் மேலான நேரத்திற்கு கண்களால் பேசிக்கொண்டிருக்கிறேன். தன்னுடையது என்றால் தலைமயிரென்றாலும் பெரிது என்ற கண்ணதாசன் சொன்னது இதைக் குறித்துதானோ?

அம்மாவின் வாழ்த்து. அப்பாவின் ஆசிர்வாதம். புதிய துணிகள், இனிப்புகள், நண்பரின் வாழ்த்து என்று வழக்கமான நடைமுறைகளோடு இந்த பிறந்தநாளும் கழிந்துவிடும் என்று தான் நினைத்தேன்.

தானொன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பான் என்ற பழமொழியை 
இன்று காலை நாட்காட்டியில் படித்தது, இன்றே என் வாழ்வில் நடக்கும் என என் மூளையின் எந்த நியூரானும் எண்ணிப்பார்த்திருக்காது.

திடீரென்று தென்றல் வீசுவுது போன்ற ஒரு உணர்வு. சூரியன் மேகத்தின் பின் ஒளிந்து கொண்டான். வெப்பத்துக்கு வேர்த்து கொட்டி எங்கோ குளிர்பிரதேசம் நோக்கி ஓடியது. சுருக்கமாக சொன்னால் சட்டென்று மாறியது வானிலை.

அறையை விட்டு நீங்கினேன். பேச்சுக்குரல்கள். புதிய மனிதர்களின் குரல்கள்.

ஒரு வேளை கூடத்துக்கு வந்திருக்கக் கூடாதோ?. இவ்வளவு குளுமையான வலியை என் கண்கள் அனுபவித்து நான் அறிந்ததில்லை. என் நாசி உணர்வது தான் அழகின் நறுமணமா? என்னை அறியாது என் மேல் தாடைகள் இன்னும் மேலே இழுக்கப்பட்டன. கீழ் தாடைக்கு அடியே மட்டும் புவியீர்ப்பு சக்தி இன்னும் அதிகமாகி கீழ்தாடையை இழுத்து கொண்டது. வாய் பிளந்து நின்றேன்.

ஏன்டா அங்கையே நின்னுட்ட? நம்ம பக்கத்துவீட்டுக்கு குடி வந்திருக்காங்க. இவன் தாங்க என் பையன். பேரு……………… இன்னும் என்னவோ என் அருமை பெருமைகளை விளக்கிக்கொண்டிருந்தாள். அதெல்லாம் சரி பரவசம் என்னும் அனுபவம் இங்கு தலையில் வகிடெடுத்து, நீல ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி, இரு கண்கள், ஒரு மூக்கு, ஒரு வாய், இரு காதுகள் கொண்டு, காதின் முடிவில் நீல நிற கல் பதித்த நட்சத்திர தோடு பதித்து, வான் நீல சுடிதார் அணிந்து உட்கார்ந்திருக்கிறதே. இதென்ன படைப்பாய் இருக்கும் என்று வியந்து கொண்டிருந்தேன்.

அப்போது அந்த படைப்பின் வாய் அசைந்தது. ஏதோ ஓசை வேறு கேட்கிறதே. உற்று கேட்க புருவங்களை சுருக்கினேன். அந்த ஓசை ஏதோ வார்த்தைகள் போல. ஓசை வார்த்தைகளாய் மாறா அந்த வினையை எனது சுருங்கிய புருவமும் துருத்திய கழுத்தும் என் முன் அமர்ந்திருக்கும் அந்த படைப்புக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

மறுபடியும் இதழ்கள் இருக்கும் இடம் அசைந்தது.

“ஹேப்பி பர்த்டே.”

ஆங்கிலம். ஆம் ஆங்கிலமேதான். ஆக இது மனித படைப்புதான். பேசுவதும் மனித மொழிதான். ஆம். பெண்ணே தான்.
உலகம் உணர்ந்தது. நான் பூமி என்னும் கிரகத்தில் வாழும் மனிதன். ஆண். இன்னாருக்கு மகன். Debit the receiver. Credit the giver. அ, ஆ, இ, A,B,C,D எல்லாம் புரிந்தது.

வாஸ்து சரியில்லை என்று என் இதயம் உணர்ந்திருக்க வேண்டும். என்னைக் கேட்காமலே தொண்டை குழிக்கு இடமாறியிருந்தது. நன்றி, தேங்க்ஸ் இன்னும் என்னன்னவோ சொல்ல முயற்சித்து ஒரு வழியாக தேங்க்ஸ் என்று ஒலிக்கும் விதத்தில் எதையோ ஒன்று சொல்லி முடித்தேன்.

இந்தப் பதிவின் முதல் மூன்று வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து கொள்ளுங்கள். செத்துக் கொண்டிருக்கும் போது தொந்திரவு செய்யாதீர்கள்.

நண்பர்களாகிவிட்டோம்! ஒரே கல்லூரி! ஒரே வகுப்பு!

அவளுக்கு பிடித்த நிறம் பச்சை. பிடித்த ஹீரோ மாதவன், பிடித்த பேனா ஹீரோ பேனா, பிடித்த பாடம் cost accounting, பிடித்த படம் அலைபாயுதே, பிடித்த இடம் கடற்கரை, பிடித்த உணவு சப்பாத்தி, பிடித்த அணிகலன் தோடு, பிடித்த உடை சுடிதார், பிடித்த சேனல் சன் மியூசிக், பிடித்த விஷயம் மழை, பிடித்த ஐஸ்கிரீம் வெண்ணிலா. இப்படி பல பிடித்தல்களுக்கு இடையே என்னை பிடித்துவைத்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையை பிடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்

கல்லூரி மூன்றாமாண்டு, கடைசி செமஸ்டர் தன் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தேதி: ஏப்ரல் 4.

“சொல்லுடா என்ன கிஃப்ட் வேணும்?.”

அடிப் பைத்தியக்காரி. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பரிசு தானே? நீ பார்த்த பொருளை நான் பார்த்திருக்கிறேன், நீ கேட்ட ஒலிகளை நான் கேட்டிருக்கிறேன். நீ கொண்டு வந்த டிபன் பாக்ஸில் உன் கையால் எடுத்து கொடுத்த உணவை உண்டிருக்கிறேன், நீ சுவாசித்து வெளிவிட்ட காற்று எனைத் தீண்டி சென்றிருக்கிறது, இப்படி என் வாழ்க்கையையே பரிசாக்கிய நீ, என்னோடு இருந்து இந்த பரிசுகளை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

“டேய்! டேய்ய்ய்ய்! எப்படிடா நான் எதாவது கேள்வி கேட்டா உடனே செவ்வாய் கிரகத்துல போய் உக்காந்துடுற? இந்த உலகத்துக்கு வா.”

”உம் என்ன கேட்ட? கிஃப்டா? குதுப் மினாரை ஒரு கால் கிலோ வாங்கித் தாயேன்.”

“உன்னை போய் கேட்டேன் பாரு. நீ கிறுக்குத் தனமா பேசுவேன்னு தெரியும்.” என்ற படி அவளுக்கு விரல்களாய் அமைந்திருக்கும் தூரிகைகளை வளைத்து ஏதோ ஒரு வண்ணமயமான பெட்டியை பற்றி கையில் கொடுத்தாள்.

இந்த வண்ணக் காகிதம் அவள் வாங்கும் போது வெள்ளைக் காகிதமாகத் தான் இருந்திருக்க வேண்டும். அவள் தூரிகை விரல்கள் பற்றியதால் தான் இந்த வண்ணங்கள் அதன் மேல் ஒட்டியிருக்கக்கூடும் என்று செவ்வாய் கிரகத்தில் நுழைந்து கொண்டே அந்த காகிதத்தை பிரித்தென்

“ஹேய்! வாட்ச்! சூப்பர்.” அதைத் தவிர என்னால் அப்போது ஏதும் சொல்ல முடியவில்லை.

“ஏன்டா நான் என்ன செஞ்சாலும் ஹேய்! சூப்பர் இதைத் தவிர எதையும் சொல்ல மாட்டியா?”

.“இப்போ என்ன சொல்லனும்?”

“எதையாவது சொல்லு.”

“ஐ லவ் யூ.”

எழுந்தாள். மிதந்தாள்.

ஒரு நொடி கரைந்தது, ஒரு நிமிடம் கடந்தது, ஒரு நாள் கழிந்தது. ஒரு வாரம் கழிந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு வருடம் கழிந்தது.
இந்த நாட்களில் கடந்து போன என் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் அவள் இருந்து கொண்டே இருந்தாள். பச்சை நிறமாக, மாதவன் படங்களாக, ஹீரோ பேனாவாக, cost accounting formulaகளாக, கடற்கரையாக, சப்பாத்தியாக, சன் மியூசிக்காக, மழையாக, வெண்ணிலா ஐஸ்கிரீமாக, என இருந்து கொண்டே இருக்கிறாள்.

மறுபடியும் ஏப்ரல் 4.

அலுவலகத்துக்கு பரபரத்துக் கொண்டிருந்தேன்
“டேய்!”

என் அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தாள்.

”சாயந்திரம் வீட்டுக்கு வா! உன்கிட்ட பேசனும்.”

உலகம் உடைந்துகொண்டிருந்தது. கையில் வைத்திருந்த ஹெல்மெட் என் கீழ்த்தாடைக்கு பதில் புவியீர்ப்பை தான் இழுத்து கொண்டது.
சிரித்தாள். இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
பைக்கை உதைத்தேன்.

இன்னும் என் வீட்டின் வாசலில் தான் நின்று கொண்டிருந்தாள்.
சிரித்து கொண்டே இருந்தாள்.

ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தும் அவள் சிரிப்பு என் கண்களை அடைத்துக் கொண்டே நின்றது.

இதென்ன லாரி டயர் கூட சிரிக்கிறது. இந்த டயர் ஏன் தலை மீது ஏறிச் செல்கிறது? என்னவோ செய்து போகட்டும். நான் காற்றில் மிதந்து கொண்டு இருக்கிறேன். அது மட்டும் தெரிகிறது. ஏனென்றால்..

இன்று என் பிறந்தநாள்!

அவள் இதழ் ஒவ்வொரு மில்லி மீட்டராய் விரிந்து கொண்டிருக்கிறது!

நான் செத்து கொண்டிருக்கிறேன்!

11 comments:

 1. அருமையான அற்புதமான வரிகள்

  ReplyDelete
 2. சூப்பர்... பிறந்த நாள் வாழ்த்துகள். உமது எழுத்து திறமை மேன்மேலும், நாளுக்கு நாள் மெருகேறி கொண்டிருக்கிறது. அதற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. happy b'day nattu

  Mylapore crowd illaina meet panni irupen.. antha pakame vara mudiyala

  ReplyDelete
 4. @supriya: :)

  @thiru: மிக்க நன்றி! :)

  @பிரிட்டோ: நன்றி! :)

  @போக்கிரிஸ்: வாழ்த்துகளுக்கு நன்றி :)

  @கார்க்கி: நன்றி குருவே! :) எப்பா! என்ன கூட்டம்! நாட்கள் இருக்கும் வரை கவலை இல்லை. நிச்சயம் மற்றொரு நாள் சந்திப்போம்

  ReplyDelete
 5. அடடா அருமை. சில வரிகள் மிகவும் அருமை
  //வெப்பத்துக்கு வேர்த்து கொட்டி எங்கோ குளிர்பிரதேசம் நோக்கி ஓடியது//
  //அவள் தூரிகை விரல்கள் பற்றியதால் தான் இந்த வண்ணங்கள் அதன் மேல் ஒட்டியிருக்கக்கூடும் //

  ReplyDelete
 6. வரிகளில் துள்ளிக்குதிக்கும் இளமையும், உவமையும் நடைக்கு அழகு சேர்க்கின்றன.. உங்கள் எழுத்தில் இயக்குனர் பார்த்திபனின் சாயல் தென்படுகிறது.. இன்னும் பயிற்சி எடுங்கள்.. வாழ்த்துக்கள்.. :-)

  ReplyDelete
 7. இந்த வார , என் விகடனில் தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  மென் மேலும் தொடரவும்.

  இணையத் தமிழன், விஜய்
  http://inaya-tamilan.blogspot.com

  ReplyDelete
 8. சொற்களின் இனிமை இதயத்தை கவர்ந்தது.... என்றும் அன்புடன் :)

  ReplyDelete
 9. ''இந்த நாட்களில் கடந்து போன என் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் அவள் இருந்து கொண்டே இருந்தாள். பச்சை நிறமாக, மாதவன் படங்களாக, ஹீரோ பேனாவாக, cost accounting formulaகளாக, கடற்கரையாக, சப்பாத்தியாக, சன் மியூசிக்காக, மழையாக, வெண்ணிலா ஐஸ்கிரீமாக, என இருந்து கொண்டே இருக்கிறாள்.'' அருமையான பதிவு நண்பரே ...

  ReplyDelete

வாங்க பழகலாம்