Tuesday, April 3, 2012

நான் யார்?







365 நாட்களாம் ஒரு வருடத்துக்கு! ஆனால் இந்த வருடத்துக்கு 366 நாட்கள்! அதில் ஒரு நாளில் தான் இப்போது நான் இருக்கிறேன். இந்த ஒரு நாளை அடைவதற்கு நான் பலநாட்களை கடந்து வந்துள்ளேன். அல்லது பல நாட்கள் தங்களது உயிரை மாய்த்து கொண்டு இந்த நாள் வாழ்வதற்காக தியாகம் செய்துள்ளன. எண்ணிப் பார்க்கிறேன்.
1     2     3     4     5     6     7      8     9  10 11    12    13    14    15    16    17     18    19    20    21    22    23    24    25    26    27    28    29    30    31    32     33    34    35    36    37    38    39    40    41    42    43    44    45    46    47     48    49    50    51    52…………….

நிறைய நாட்கள் தான் கடந்துவிட்டன! கரைந்துவிட்டன! இறந்துவிட்டன! ஒவ்வொரு நாட்கள் குறையும் போதும் அதை எண்ண முயற்சித்தால் எண்கள் அதிகமாகின்றன. இதற்கு பெயர் என்ன விதியோ தெரியவில்லை. இதுவரை இப்படி ஒரு தியரியை யாரும் சொல்லவில்லை என்றால் ”ஓலைக்கணக்கன் தியரி” என்று இதை உலகுக்கு தெரியபடுத்துங்கள். தமிழனுக்கு ஒரு தியரி கிடைத்த மகிழ்வை டாஸ்மாக்கில் இன்னொரு வட்டம் சுற்றி கொண்டாடலாம்.

சூரியன் என் முகத்தில் வெளிச்ச விரல்களால் அறைந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வெப்பக்கதிரும், வெளிச்சத் துளியும் எனக்கு என் இருத்தலையும், உலகத்தின் இருத்தலையும் தெளிவாக உணர்த்திகொண்டிருந்தன.

உலகத்தின் இருத்தல் இருளில் உணரப்பட்டாலும், வெளிச்சம் தான் வெளிச்சம் போட்டு உணர்த்துகிறது. வெளிச்சத்தில் தான் இரண்டு வருடங்களுக்கு முன் நான் தூக்கிப்போட்ட மாங்கொட்டை மாமரமாக வளர்ந்து நிற்பது தெரிகிறது. நான் கூட இரண்டு சுற்று பெருத்துதான் விட்டேன்.

ஆனால் தான் இருக்கும் இடத்திற்கு நிலத்தடி நீரை உயர்த்துவது, நிழல் தருவது, காய் தருவது, கனி தருவது என பல சமூக பயன்களை தருகிறது. ஆனால் நான்? இது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமோ? இதற்காகத்தான் இந்த வருடத்தின் இந்த நாளை எண்ணுவதை பற்றி எண்ணியிருக்கிறேனோ?

நான்.

நான் யார்?

பெரிய ஞானிகள் கூட செல்வம் துறந்து, சொந்தம் தவிர்த்து துறவு பூண்டு தெருவெல்லாம் அலைந்து, தவம் செய்து விடை கண்டுபிடித்து கண்டுபிடிக்காமல், என பல தொடர் புள்ளிகள் இடும் வாக்கியம் அமையும் அளவுக்கு விடை அமைக்க வல்ல கேள்வி இது.

அது என் நோக்கம் அல்ல! நான் இதுவரை என்ன செய்தேன் என எண்ணி பார்க்க வேண்டும். இந்த பூமியில் நான் அடைத்து கொண்டிருக்கும் இடத்துக்கு சிறிதெனும் நியாயம் செய்திருக்கின்றேனா? செய்ய முயற்சித்திருக்கிறேனா?

நியாயம் என்னும் போது யாருக்கு நியாயம் என்ற கேள்வி தோன்றுகிறது? எனக்கா? என் குடும்பத்துக்கா? நான் வாழும் தெருவுக்கா? என் ஊருக்கா? என் இனத்துக்கா? என் மொழிக்கா? என் நாட்டுக்கா? அல்லது மனித சமுதாயத்துக்கா?

இப்படி பட்ட எண்ணங்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவுடன், ஒரு கவுரவமான நிலையை அடையும் போது கேட்க வேண்டிய கேள்விகள்.
வாழ்வில் வெற்றி என்பது தான் என்ன? இந்த 24 வயதில் வெற்றி என்பது கல்வி, கல்வியால் ஈட்டப்படும் செல்வம், பின் செல்வத்தால் ஈட்டப்படும் உயர்கல்வி, அக்கல்வியால் ஈட்டப்படும் பெருஞ்செல்வம். இது தான் 
இப்போதைக்கு என் வெற்றி.

இந்த வெற்றியை ஈட்டுவதற்கு என்னிடம் திறமைகள் உளவா? அல்லது திறமையை வளர்க்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறேனா? இல்லை! காலை அலுவலகம் சென்று அன்றைய நாளை நாற்காலியில் கடத்தி, மாலையை தொலைக்காட்சி முன் இருக்கும் சோபாவில் பயனற்றதாய் போக்கியிருக்கிறேன்! எனவே இல்லை!

திறமைகளைத் தாண்டியும் தேவையானது சமுதாய கட்டமைப்பை அறிதல். சமுதாயத்தை படித்தாலே திறமை வந்துவிடுமே. சமுதாயம் என்பது என்ன? என்னை சுற்றி உள்ளது யாவுமே சமுதாயம் தான். மக்கள். சமுதாயத்தின் தவிர்க்கா இயலா அங்கம். அவர்களை அறிந்துவைத்திருக்கிறேனா? என் எதிர் வீட்டில் இருப்பது யார் என்று கூட தெரியாது. இருங்கள் அதை பார்க்கிறேன். அட! என் வீட்டுக்கு எதிரே இருப்பது வீடே இல்லை. இது ஒரு வணிக ஸ்தாபனம். அதுவே இப்போது தான் தெரிகிறது! எனவே இதுவும் இல்லை!

குறைந்தபட்சம் என் தாயின் வார்த்தைகளை எந்த அளவுக்கு மதித்து நடந்திருக்கிறேன். பொழுதோடு இல்லம் சேர் என்று அவள் சொன்ன காலை தேய்ந்த இரவன்று இரண்டாம் காட்சிக்கு போன நான், என் அப்பாவின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்று, தாழிடாத கதவை பார்த்து அவள் கண்கள் எப்படி பூத்து போயிருக்கும். எத்தனை முறை அவளின் சமையலறை ரகசிய கஜானாவில் இருந்து, தந்தைக்கு தெரியாமல் செல்வத்தை எனக்கு அளித்திருப்பாள்.? எனவே தாய் சொல்லும் கேட்கவில்லை! இல்லை!

தாயென்னும் கோவிலைத் தான் போற்றவில்லை. தந்தையின் மந்திரத்தையாவது கேட்டிருக்கிறேனா? இல்லை!

வீட்டுக்கு தான் எதையும் பயனுள்ளதாக செய்ததில்லை. நாட்டுக்கு? குப்பையை பலகணியிலிருந்து வீசி இருந்திருக்கிறேன். ரசீது இல்லாது பொருட்கள் வாங்கியிருக்கிறேன், ஆண்டிருதியில் வரியைக் குறைக்க வீட்டு வாடகை ரசீதில் பொய்யான எண்களை நிரப்பியிருக்கிறேன். சுதந்திர தினத்தில் கொடிக்கு வணக்கம் செய்ததை தவிர நாட்டுக்கும் எந்த நல்லது செய்யவில்லை! இல்லை!

வசிக்கும் வீட்டுக்கு, வாழும் நாட்டுக்கு, இருக்கும் சமுதாயத்துக்கு எந்த நலனும் செய்ததில்லை.

உண்டிருக்கிறேன், உறங்கியிருக்கிறேன்.

தாங்கும் பூமிக்கு பாரமாய் இருந்திருக்கிறேன்.

வெளிச்சம் மறைத்து நிழல் உண்டாக்கி இருக்கிறேன்.

பொழியும் மழையை பயனற்றதாய் ஆக்கியிருக்கிறேன்.

இருளை அறுத்து விளக்கிட்டு இருக்கிறேன்.

பயனற்றது யாவையும் செய்திருக்கிறேன்.

எழுந்தேன்.

தொண்டை அடைத்தது.

தலை சுற்றியது.

வெறுப்பும், ஆத்திரமும் பொங்கியெழுந்தது.

அப்போது தான் அந்தக் குரல், என் தாயின் குரல், என் நலனை தன் நலனாய் கொண்ட அந்த தெய்வத்தின் குரல் எனை நோக்கி காற்றில் கரைந்து வந்தது.

 “டேய்! எப்ப பார்த்தாலும் மரத்தடியில உக்காந்துட்டு என்னத்தட வெறிச்சு பார்த்துட்டு இருக்க? வந்து பூரியை சாப்பிடுடா.”

“தொட்டுக்க என்னமா பண்ணியிருக்க? குருமாவா? கிழங்கா?”

“கிழங்கு தான்”.

”தோ வந்துட்டேம்மா.” சமையலறை நோக்கி நடந்தேன்

நீதி: கோபம் வரும் போகும் ஆனா பூரி???

6 comments:

  1. பதிவு பிரம்ம்ம்ம்மாதம்.....பூரி நல்லாருந்துச்சா? ஆனாலும் நிஜதேடல் உங்களுக்கு இருக்கிறமாதிரியே எனக்குத் தோன்றுகிறது..

    ReplyDelete
  2. அட்டகாசம். உன் பதிவுகளிலேயே நான் மிக ரசித்தது இதுதான்.

    ReplyDelete
  3. சிந்திக வைக்கிறது

    ReplyDelete
  4. அறிவுப்பசியை திசைதிருப்புவது பலசமயங்களில் வயிற்றுப்பசியும் சில சமயங்களில் உடல் பசியுமே என்பதை அழகாகச் சொல்கிறது க(வி)தை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete

வாங்க பழகலாம்