Wednesday, November 16, 2011

காய்ச்சல்


”மேற்கே உதித்த சூரியனே உன்னை கிழக்கே உதிக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடையும் என்றால் தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்.”

06:00 A.M

”Snooze” “Cancel”

Snooze என்ற இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை பாராட்டும் விதத்தில் அதை அழுத்திவிட்டு மீண்டும் தலை தலையணையோடு சேர்ந்தது.
”மேற்கே உதித்த சூரியனே உன்னை கிழக்கே உதிக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடையும் என்றால் தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்.”

06:05 A.M

”Snooze” “Cancel”

ஐந்தாண்டுக்கு ஒருமுறை பொத்தான் மாற்றி அமுக்கும் கை அல்லவா இது! ஐந்து நிமிடம் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே இம்முறை “Cancel”.
ஆதவன் பனி விலக்கி, இந்திய ஆட்சியாளர்கள் (தமது) வறுமை விலக்கி, இந்த வரிசையில் நானும் போர்வை விலக்கி எழுந்தேன்.

இல்லை. இப்படி கை ஊனி முதுகு மட்டும் நிலத்தில் இல்லாமல் மற்ற பாகங்கள் யாவும் நிலத்தில் இருக்கும் தன்மைக்கு அமர்தல் என்றுதானே சொல்வார்கள். அப்புறம் ஏன் எழுந்துவிட்டேன் என மூளை நினைக்கிறது?

இதென்ன இடுப்பில் ஒரு வலி! மறுபடியும் இல்லை! முதுகில் அல்லவா வலி! இப்படி பல இல்லைகளுக்குப் பின் தெரிந்தது உடல் முழுவதுமே வலிக்கிறது என்று. இதைப் புரிந்து கொள்ள என் மூளைக்கு ஏன் இவ்வளவு நேரம் எடுத்தது என யோசித்த கணத்தில் ஒரு நியூரானின் SMS மூளையை எட்டியது. என் கை என் கழுத்தை நோக்கி சென்றது. 


இவ்வளவு நேரம் கனவில் உணர்ந்த “அவள்” உடல் உஷ்ணம் என்னுடலில் உணர்ந்தேன் இப்போது. அவளே அருகிலிருந்தால் தேவலை என்றிருந்தது. மற்ற நேரங்களை விட, உடம்புக்கு ஏதாவது ஒன்று வரும்போதுதான் உடல் பொதியும் சூட்டைத் தரும் ஒரு அரவணைப்பை நாடுகிறது மனம்.

பால் வைத்து induction stove சரியாக வேலை செய்கிறதா என இரண்டு நிமிடம் கழித்து பாத்திரத்தை தொட்டது போல் இருந்தது. இரவு கூட கதவை எல்லாம் அடைத்துவிட்டுதானே படுத்தேன். இப்போதும் அதே நிலையில் தானே அவை இருக்கின்றன. பின் எப்படி என் வீட்டுக்குள்ளும் கூட்டுக்குள்ளும் வந்தது இந்த காய்ச்சல்.

”டேய்! காபி வேணுமா” அன்புத் தம்பியின் குரல். “போய் பல்லைத் தேச்சுட்டு வா”

சற்று சுதாரித்து எழுந்து காபி குடிப்பதக்கு முன் செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் முடித்த பின் காபி எடுக்கும் போது என் நடவடிக்கைகளைப் பார்த்த தம்பி “என்னாச்சுடா ஒரு மாதிரி இருக்கே” என்றபடி அதே கழுத்தை தொட்டு அதே பால் சூட்டை அனுபவித்தான்.

“டேய்! ஜீரம் அடிக்குது டா. என்னப் பண்ணி தொலைச்ச? அம்மாவுக்கு போன் பண்ணட்டுமா” என்ற அவனின் கேள்விக்கணைகளை ஒரே முறுவலிப்பில் மறுத்து, டம்பளரில் இருந்து வாய் நகர்த்தினேன்.

அம்மாவுக்கு தொலைபேசி என்றவுடன் கேப்டன் படம் வரும் போது ரிமோட்டை பிடுங்குவது போல அலைபேசியை அவனிடம் இருந்து கவர்ந்தேன்.

“ஒன்னும் இல்லை! மாத்திரை போட்டால் சரியாகிவிடும்” என்ற ஒற்றை வரியில் மறுத்தேன். அதிகம் பேசினால் வார்த்தை வளரும். அவனுக்கு பதில் சொல்ல முடியாது. முக்கியமாக அம்மாவுடன் அரை மணி நேரம் அலை பேசியில் அம்மாவின் அழுகையையும், புலம்பல்களையும் கேட்க முடியாது என்ற எண்ண ஓட்டத்தில் குறுக்கே வந்தது அந்த தும்மல்.

“சளி வேறையா! வா ஏழு மணிக்கு டாக்டர் வந்துடுவார் பார்த்துடலாம்”.

”யாருக்கு டாக்டர்?” என்றபடி காதில் அலைபேசியுடன் நுழைந்தாள் என் தங்கை. மறுமுனையில் அம்மா. அடுத்த அரைமணி நேரத்துக்கு என்ன நடந்தது என நிச்சயம் இங்கு எழுதப் போவதில்லை.

”டாக்டரை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை cold act ஒன்று வாங்கித் தருகிறேன்” அத போட்டுக்கோ என்றான் தம்பி.

“அதெல்லாம் பத்தாது! கூட calpolஉம் போட்டுக்கோ” தங்கை.
சோனியாவுக்கு முன் அமர்ந்திருக்கும் மன்மோகன் போல பேசாமல் மையமாக தலையாட்டி வைத்தேன்.

”Hi Gd mg! Nt cmg to office 2day. Down with fever” என்ற sms என் மேலாளருக்கு மட்டுமில்லாமல், அலுவலக வாகனத்தில் எனக்கு முன்னால் வருபவர், அடுத்து வருபவர் என சகலமானவர்களுக்கும் அனுப்பினேன். Calpol மட்டுமே மாத்திரை என்ற பெயரில் சாப்பிட்டேன். அம்மாவிடம் ”டாக்டரை பார்த்து வந்தேன். சாதாராண காய்ச்சல் இரு நாட்களில் சரியாகிவிடும் என்றார்” என்ற பொய்யோடு அந்த நாள் முடிந்தது.

அடுத்த நாள் பெரிதாக எதுவும் வலியில்லை! ஜூரம் மட்டும் நவநாகரீக இளைஞர்களின் பேச்சில் இருக்கும் தமிழ் போல லேசாக ஒட்டிக்கொண்டிருந்தது.

அலுவலக பார்க்கிங்கில்...

”ஹேய்! என்ன நேத்திக்கு காணோம். Extended week endஆ” என்ற நண்பரிடம் காய்ச்சல் பற்றி சொன்னேன்.

“டாக்டர் கிட்ட போனியா? ஒரே நாளில் வந்துட்ட? அப்படிதான் இப்ப அடிக்காத மாதிரி இருக்கும். சளி இருக்கா? ஒழுங்கா டாக்டர பாத்துடு ஏதாவது பெரிசா வந்துடப்போகுது” என்றவனிடம் இம்முறை அம்மா முன் தலையசைக்கும் OPS மாதிரி வேகமாக தலையசைத்து சென்றேன்.
மின்னஞ்சலில் ஒன்றும் பெரிதாக இல்லை! மாதத்தின் இடையில் இருப்பதால் வழக்கமாக வரும் கணைகளைத் தவிர ஒன்றும் இல்லை. பிரம்மாஸ்திரம் எல்லாம் மாதக் கடைசியில்தான் என்றபடி மகிழ்ந்திருக்க மேனஜரின் IM status online என்றது.

விடுமுறை முடிந்து வந்தால் மேனஜர் முதலில் பார்க்கும் ஆள் நீயாகத்தான் இருக்கவேண்டும் இல்லையெனில் ஆன்லைனில் இருந்தாலும் “R u taking off today?” என்றொரு SMS பாலஸ்தீனத்தைக் கண்ட இஸ்ரேலின் ஏவுகணை போல பறந்து வரும்.
மேலாளரைக் கண்டு பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பின்....

“அலட்சியமா இருக்காத! இப்படித் தான் என் பையனுக்கு சாதா ஜீரம் மாதிரி ஆரமிச்சுது. விட்டு விட்டு வந்தது என அலட்சியமாக இருந்துட்டோம். கடைசியல டைஃபாடில் கொண்டுவிட்டது. Cold வேற இருக்கு ஒழுங்கா டாக்டர போய் பார்த்துவிடு” என்று சிவாஜியில் ரஜினியை மந்திரியை நோக்கி துரத்தும் அரசாங்க அதிகாரிகள் போல விரட்டினார். நானும் அமெரிக்காவை கண்ட இந்தியா போல இம்முறை பலமாக தலையாட்டிவிட்டு வெளியே வந்து வேலையைத் தொடங்கினேன்.

“என்னடா சீக்கிரம் வந்துட்ட? நேற்று வேற லீவு? என்னாச்சு?” என்றார் பக்கத்து சீட்டு பெரிசு.
இவர் தாமதமாக வந்த செய்கையை நான் சீக்கிரமாக வந்ததாக கருதும் lateral thinking மனதுக்குள் பாராட்டிய பின் காய்ச்சல் கதை மறுபடி சொல்லப்பட்டது.

“தலை வலி இருக்கா? இல்லேனா கூட பரவாயில்ல. உடனே Blood test எடுத்துடு. ஊருக்குள்ள ஏதோ பேர் தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவுதாம். இப்படித் தான் என் தம்பி பையனுக்கு ஜீரம் மாதிரி ஆரமிச்சுது. உன் வயசுதான் இருக்கும். கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டாங்க சிக்குன் குனியாவாம். கிட்டதட்ட மூணு மாசம் படுக்கையில கிடந்தான். இப்பத்தான் சரி ஆச்சு! ஆளு அரையாளு ஆயிட்டான். பாத்துக்கோ அவ்வளவுதான் சொல்ல முடியும்.” என்று சொல்லிவிட்டு எதிர் சீட்டுக் காரரிடம் தன் பேச்சைத் தொடங்கினார்.

பதினொரு மணி காபிக்கு Pantry நோக்கி நகர்ந்தேன்.

அங்கு பக்கத்து டீமில் இருக்கும் அந்த நண்பர் வழக்கம் போல் நேற்று நான் வராததன் காரணம் கேட்க நான் காய்ச்சல் கதை மூன்றாவது முறையாக சொன்னேன். எத்தனை முறைதான் இதே ரீலை ஓட்டுவது?!

“தோ பாரு! யாருக்கு சம்பாதிக்கிற? உன் உடம்பை நீ தான் பாத்துகனும், சுவர் இருந்தாத் தான் சித்திரம் வரைய முடியும். அப்புறம் என்னமோ சொன்னானே? ஹ்ம்ம், இன்னும் ரெண்டு நாளைக்கு மிளகு ரசம் மட்டும் சாப்பிடு. நான் சொல்லும் கடையில் ஒரு பொடி வாங்கி தினம் மூனு வேளை சாப்பிடு. ஜலதோசத்துக்கு ஆவி பிடி. சித்த வைத்தியத்துல இல்லாததே கிடையாது. கெமிக்கல போட்டு நிலத்த தான் கொன்னுட்டாங்க உன் உடம்பையும் கொன்னுடாத. Paracetamol மாத்திரை சாப்பிட்டா கிட்னி சீக்கிரம் வீணாயிடும் தெரியுலில்ல? இன்னிக்கு வீட்டுக்கு போகும் போது என் கூட வா நான் மருந்து வாங்கித் தரேன்” என்று வேறொரு நாட்டில் குண்டு போட்ட பின் ஒன்றுமே தெரியாமல் போகும் அமெரிக்கா போல அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றார்.

மதிய உணவுக்கு சென்ற போது இன்று அலுவலக cabஇல் வராதவர் சிரித்தார்.
“ஜீரம்னு சொன்னிங்க போல! இப்ப எப்படி இருக்கு?” என்றார்.

மறுபடியும் சியர்ஸா என நான் மனதில் நினைத்தது அவருக்கு கேட்டிருக்க வேண்டும்! ஆனால் அவர் எந்த அறிவுரையும்(திகிலுரை?) சொல்லாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார். ஆஹா! மீதி சில்லறையான ஐம்பது பைசாவை திருப்பி கொடுத்த பேருந்து நடத்துனரை பார்ப்பது போல அவரைப் பார்த்து வியந்தேன்.

ஆனால் முகமது கோரியைப் போல எதிர்பாராமல் தடால் என்று வந்தார்.

“இந்தாப்பா! இது என் பேமலி டாக்டரோட கார்டு இவரை இன்னிக்கே பாரு அமெரிக்கா ரிட்டன். ஏன் சொல்ரேன்னா என் பக்கத்துவீட்டு பையனுக்கு ஆறு மாசம் முன்னாடி இப்படித்தான் ஒரு காய்ச்சலில் ஆரமித்தது. கவனிக்கமா விட்டதுல சளி நுரையீரல்ல ஏறி, தலையில் வேறு கட்டிக்கொண்டு ஆபரேசன் எல்லாம் பண்ணாங்க கடைசியில் போய் சேந்துட்டான். ஒன்னும் பண்ண முடியல.”

“கொய்யாலே... சாதா காய்ச்சல் தானேடா... ஏண்டா ஏன்?” மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். வழக்கமாக அழகான பெண்களை கண்டால் கண்ணுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறந்தது.

“பயமுறுத்திரேன்னு நினைக்காத! உனக்கு சைனஸ் எல்லாம் இல்லேல்ல. அது இருந்தா அவ்வளவு தான். பணங்காசு போனா வரும் உயிர் போனா?”.
நேராகச் மேலாளரிடம் சென்றேன். ”டாக்டர பாக்கனும் ஒரு ஆஃப் டே பர்மிசன் வேணும்.”
பேருந்து நிலையம் வந்து நின்றவுடன் எனைக் கண்ட தோழி போல 29C ஓடோடி வந்தது.

. “ஜெமினி ஒன்னு”.

ஜெமினி சிக்னலில் இறங்கி இருபது நிமிட நடை. அந்த கட்டிடம் முன் நின்றேன். பணம் இருக்கிறதா என்று பர்சை திறந்து பார்த்தேன்! 100 எண்ணுக்கு பக்கத்தில் இரண்டு மூன்று காந்திகள் என்னை பார்த்து புன்னைகைத்தார்கள். பதிலுக்கு புன்னகைக்க நேரம் இல்லை.”
நேரம்: 01:30

”அண்ணே! Tintin டிக்கெட் இருக்கா”

“இருக்கு”

“எத்தனை மணிக்கு ஷோ?”

“01:45”.

8 comments:

  1. வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்தது போல் இருந்தது(உங்கள் பாணியில்...)!!! எல்லா எழுத்தாளர்களுக்கும்(எழுதுறவங்க எல்லாருக்கும்) ஒரு தனி பாணி இருக்கும். உங்ககிட்ட நான் பார்த்து தெரிஞ்சுக்கிட்டது உங்களோட உவமைகள்! எக்கச்சக்கமா உவமை பயன்படுத்தினாலும், அது அலுக்கவில்லை. அது தான் உங்கள் எழுத்தின் திறமை என்று நான் நினைக்கிறேன். நிறைய எழுதுங்கள்! :)

    ReplyDelete
  2. யப்பா! அருமையா கீதுப்பா!

    ReplyDelete
  3. நல்ல பதிவு. யதார்த்தம்.

    ReplyDelete
  4. அபாரம் மச்சி..

    ReplyDelete
  5. அருமை , உவமைப்படுத்துதலை குறைத்தால் நன்றாக இருக்கும் , , வாழ்க வளர்க ,

    ReplyDelete
  6. Wen did this happen da?? Nowadays u dont tel me anythin at all. N tat tintin part is sheer cheating. Hate u!

    ReplyDelete
  7. காய்ச்சல்!! ய்தார்த்தம்

    ReplyDelete
  8. Very funny:-)ஆனா உடம்பை பார்த்துக்கோங்கோ. விளையாட்டா விட்டுடாதீங்க :-)
    amas32

    ReplyDelete

வாங்க பழகலாம்