ரத்த சிகப்பாய்
இருந்தது வானம். சூரியன் இன்று சென்னை பகுதியில் இருந்து எத்தனை டி.எம்.சி தண்ணீரை
ஆவியாக மாற்ற வேண்டுமென்று அடிவானில் யோசித்து கொண்டிருந்தான். கோயம்பேட்டின் பேருந்துக்கு
அடியில் வைத்திருந்த குங்குமம் பூசிய எலுமிச்சை பழம் சாதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
சாலைகள் நடுவில் நட்டு வைக்கப்பட்ட சிக்னல் மரங்கள் சிகப்பு விளக்குகளின் ஒளியை வானத்தில்
இருந்து கடன் வாங்கிக் கொண்டிருந்தது.
சிகப்பு தான் எத்துணை
அழகான நிறம். அதனால் தான் ஆபத்துக்கு அடையாளம் ஆக்கிவிட்டார்கள் போலும். அழகும் ஆபத்தும்
ஒருங்கே இருக்கும் பகுதிக்கு கூட சிகப்பு விளக்கிட்டு விலக்க இயலாது சமுதாயத்தின் ஒரு
அங்கமாக ஆக்கிவிட்டார்கள்.
வானத்தில் இருந்த
சிகப்பை மஞ்சள் ரப்பரால் அழித்து தன் ஒளி
ஆக்ரமிப்பை நடத்த சூரியன் தொடங்கியிருந்தான்.
அந்த விடியல் ஒருவருக்கு லாபத்தையும், சிலருக்கு நஷ்டத்தையும், ஒருவருக்கு மரணத்தையும்,
சிலருக்கு வேதனையையும் கொண்டுவரப்போகிறது என்று எழுதப்பட்டிருக்கிலாம். எழுதப்படலாம்.
சூரியன் உச்சிக்கு
வந்திருந்தான். 12 மணிக்கு “சத்தம் போடு” என்று நான் போட்ட கட்டளையை என் அலைபேசி ஒரு
வேலைக்காரனுக்கே உரித்தான பாவனையோடு முதலில் மெல்லமாக பின் கடமையை உணர்ந்து உரக்க கத்த
தொடங்குகிறது. விடிந்து விட்டது போலும்.
அமெரிக்க வாழ்க்கை
சுகமானது என்று நீங்கள் கேள்விபட்டு இருக்கக் கூடும். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள்
உரிமை. ஆனால் 13.0810° N, 80.2740° E என்று புவியியல் வல்லுனர்களால் குறிக்கப்படும்
சென்னையில் வசித்து கொண்டு GMT -05:00 நேரக் கோட்டின் அடிப்படையில் வாழும் அமெரிக்க
வாழ்க்கையில், நள்ளிரவிலும் சூடாக கிடைக்கும் இட்லி சாம்பாரை தவிர சிலாகிப்பதற்கு பெரிதாக
ஒன்றும் கிடையாது.
இரைப்பையிலிருந்து
ஒரு மெல்லிய ஓசை வரத்தொடங்கியது. நிச்சயம் நேற்று இரவு இல்லை இன்றைய காலை, சரி எனக்கு
நேற்று இரவு உங்களுக்கு இன்றைய காலை, இல்லை இல்லை, ஐயோஓஓ, குழப்பம் வேண்டாம் இந்திய
நேரப்படி காலை 04:00 மணிக்கு வழக்கமாக இரைப்பைக்கு இடும் ரொட்டித் துண்டுகளை இடாமல்
விட்டதால் இன்றைய முதல் கானமே பசியின் இசையமைப்போடு தொடங்குகிறது.
சுத்தம் சோறு போடும்
என்றாலும் சோறு தின்ன சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மொழிக்கேற்ப பல் துலக்கி உணவகத்தை
நோக்கி நடந்தேன். வெளியே வந்த போதே கவனித்திருக்க வேண்டும். தெரு முனையில் கண்ணாடி
டம்பளரில் பழுப்பு பானம் விற்கப்படும் தேநீர் நிலையத்தின் நாதாங்கியில் பூட்டில் பிரதிபலித்த
சூரிய ஒளி எதிரில் இருக்கும் வேப்ப மரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கொண்டிருந்தது. இப்படியே
அண்ணாச்சி மளிகைக் கடை, லாரி டயரை பெயர் பலகையாக கொண்ட மெக்கானிக் கடை என சகல கடைகளின்
பூட்டுகளும் குடை இல்லாது வெயிலில் தொங்கிக் கொண்டிருந்தன.
நிச்சயம் ஏதோ பந்தாக
இருக்கவேண்டும். விளையாட்டு தனமாக கிரிக்கெட் பந்தா கால் பந்தா எனக் கேட்டு கடுப்பேற்றாமல்
கடையடைப்பு என்று படித்து கொள்ளுங்கள். என் எஜமானன் என் சட்டை பையில் இருந்து பாடத்
தொடங்கினான்.
“ஹலோ”
“டேய் உன் ப்ளட்
க்ரூப் பி நெகட்டிவ் தானே“
“ஆமாம்! என்னாச்சு……”
“உடனே அமிஞ்சகரை
கிளம்பு. 5 வயசு பொண்ணு மாடியிலேந்து விழுந்துட்டாளாம் உன் க்ரூப் தான். சீக்கிரம்
போ. ஹாஸ்பிட்டல் ZZZZZZ.
மத்த தகவல் எல்லாம் மெசேஜ் அனுப்புறேன். ரொம்ப அர்ஜெண்ட் கிளம்பு.”
பசியை மரண பயம்
வென்றது. வீடு திரும்பினேன். பைக் சாவியை எடுத்தேன். பர்ஸ் தனது தற்போதைய கொள்ளளவு
ரூ.50 என்றது. வீட்டின்
பூட்டு. சாவி. செருப்பு. பைக். Self starterஇல் கட்டை விரல்
ஆக்ஸிலிரேட்டரில் உள்ளங்கை. லஸ் சிக்னல். பச்சை. ராயப்பேட்டை சிக்னல் பச்சை. பச்சை.
பச்சை. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி. J. தலை கோதுதல். பச்சை. ஜெமினி சிக்னல் பச்சை.
பார்க் ஹோட்டல் சிக்னல். சிகப்பு.
“யோவ். பச்சை சட்டை.
உன்னதான். வண்டிய ஓரம் கட்டு”
“சார். லைசன்ஸ்
இருக்கு. எல்லா டாகுமெண்ஸீம் இருக்கு. ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்.”
“ஏன் சீஃப் மினிஸ்டரை
பார்க்க போவேண்டியது தானே? வண்டிய ஓரம் கட்டுன்னா ஓரம் கட்டு.”
அவர் தன் கடமைகளை
முடித்து கொண்டு என்னை நோக்கி வந்தார்.
“எந்த ஏரியா?”
“மைலாப்பூர்.”
“எங்க வேலை பாக்குற?”
“௴௴௴௴௴௴ஊஊஊஊ”
“அங்க வேலை பாத்தா
ஹெல்மெட் இல்லாம வருவியா? ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துவியா?”
“இல்ல சார். ஹாஸ்பிட்டல்
போகனும். ரத்தம் கொடுக்க போயிட்டு இருக்கேன். ரொம்ப அவசரம்.”
“ஹெல்மெட் இல்லாம
போனா உனக்கு யாராவது ரத்தம் கொடுக்கனும்.”
“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.”
அலெக்சாண்டரின்
(அதான் அவர் நெஞ்சில் இருந்த பெயர் பலகையில் எழுதியிருந்தது.) மொபைல். எடுத்து கட்
செய்தார்.
“சார் அவசரத்துல
கிளம்பிட்டேன்.”
“எல்லாருக்கும்
அவசரந்தான்யா. லைன் கிராசிங் 400. ஹெல்மெட் வேற இல்லை அதுக்கு 200. மொத்தம் 600 கட்டிட்டு
போ”
“சார் அவ்வளவு
எல்லாம் காசு இல்ல சார். ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன் சார். விட்டுங்க சார்.”
“ஃபைன் கட்டு.
விடுறேன்.”
“சார் சார்”
“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” சிகப்பு பொத்தான்.
“சரி எவ்வளவு வைச்சிருக்க?”
“50 ரூவாய்தான்
சார் இருக்கு”
“ATM card இருக்குல்ல?”
“சார் மாசக் கடைசி
வேற. ஹாஸ்பிட்டல் போகனும் சார்.”
“சரி லைன் கிராசிங்
400 ஹெல்மெட் இல்லை 200. யோவ் அந்த மெஷினை இங்க கொடுய்யா.”
“சார். ப்ளீஸ்
சார். 5 வயசுக் குழந்தை சார். மாடியிலிருந்து விழுந்துட்டா. ரத்தம் கொடுக்க போயிட்டு
இருக்கேன் சார்.”
“தச் தச் தச்!
அப்படியா. சரி கிளம்பு.”
“தேங்க்ஸ் சார்.”
“யோவ்! அந்த
50 ரூவாயை கொடுத்துட்டு போ. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். போன வாரம் பாடி மெயின் ரோடுல
ஒரு லாரிக்காரன் பைக் மேல மோதினான். உன் வயசு பையன் தான். ஸ்பாட் அவுட் ஒழுங்கா சிக்னல்
எல்லாம் பாத்து போ.”
நாடாளுமன்றம் எனது
பர்சிலிருந்து அவர் பாக்கெட்டுக்கு குடி பெயர்ந்தது.
“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” பச்சை
“நொய் நொய்’ன்னு என்ன பதினஞ்சு தடவை கால்
பண்ணிட்டு. உங்க அம்மா வந்திருக்காங்க கோதுமை ப்ரெட் வாங்கிட்டு வரணும், அதானே?!”
“என்னங்க!
ஷ்ருதி ஸ்கூல்ல….”
“ஷ்ருதி
ஸ்கூல்ல… என்னாச்சு?”
“மாடியிலேந்து
விழுந்துட்டாங்க. அமிஞ்சகரை ZZZZZZ ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்கோம். ரொம்ப நேரமா உங்க
மொபைலுக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன்.”
அடுத்து இன்கம்டாக்ஸ்
ஆஃபிஸ் சிக்னல். பச்சை.
நைஸ்..... நல்லா கதை சொல்ற மேன்.. முதலிரு பாராக்களில் வர்ணனனை லைட்டா டல்லடிக்குது.. bold, red green color ல font நல்லாருக்கு
ReplyDeleteநன்றி ஜில்! :) வர்ணனைக்கு லைட் போட இனிதான் கத்துக்கனும்! :)
Deleteshruthi ok va ippo ..
ReplyDeleteஹி ஹி! அதான் 5 வயசு பொண்ணுன்னு சொல்லிட்டேன் இல்ல. நம்புங்கடா! நம்புங்க! :)
Deleteநல்லாருக்கு...
ReplyDeleteநன்றிங்க! :)
Deleteகதை நல்லாயிருக்கு. வண்ணங்களை வெச்சு நிறைய பேர் எழுதியிருக்காங்க. இது தின வாழ்க்கை சம்பவங்களோடு இருப்பதால மாறுபடுது..
ReplyDeletebtw, ஆனாலும் இலக்கியத்தரத்துக்கு ரொம்பவும் போராடுறீங்கப்பா
/இலக்கியத்தரத்துக்கு ரொம்பவும் போராடுறீங்கப்பா/ நாங்களும் ரவுடி என்று வண்டியில் ஏறும் முயற்சியே இது. முடிந்தவரை துருத்தி கொள்ளாமல் இருக்க முயற்சி செய்கிறேன். மண்டையில் இருக்கும் கொண்டை தான் பெரிய தொல்லையே. :)
DeleteHey! Interesting da. Liked it much!
ReplyDeleteஇந்தச் சிறுகதையை வாசித்த போது ஒரு நல்ல குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தது. அருமை. :)
ReplyDeleteSirappuuu :)
ReplyDelete