Tuesday, January 17, 2012

காதல் கடிதம்





11.07.2005
ஒரு காதல் கடிதம் எழுத ரொம்ப நாள் ஆசை. எழுதி என்ன செய்வது என்ற காரணத்தால் இத்தனை நாட்கள் எழுதாமலே விட்டுவிட்டேன். கடிதம் என்று ஒன்று எழுதினால் அதை யாருக்காவது கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடிதம் எழுதி என்ன பயன்?

“நீ எல்லா காரியங்களையும் பயனோடு தான் செய்கிறாயா?” என்று ஒரு கேள்வி கேட்க இந்திய குடியரசு அனுமதி அளித்திருப்பதால் இந்தப் பத்தியை எழுத கட்டாயம் எழுகிறது. இரண்டெழுத்தில் பதில் சொல்கிறேன். “ஆம்”.
.
உதா’ரண’த்துக்கு சிறு வயதில் காக்கைக்கு அன்னமிட அன்னை அனுப்பிய போது ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தச் சோற்றை நான் காக்கைக்கு வைப்பதாக எண்ணுகிறேன். ஒரு வேளை இதை காக்கை உண்ண மறந்துவிட்டாலோ, அல்லது காக்கை சிக்ஸ் பேக் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலோ காக்கை இந்த உணவை உண்ணாதே. அதனால் இந்த காரியம் பயனற்று போய்விடுமே என எண்ணி வடையை நான் உண்டு (சாதத்தையும் தான்) எறும்புக்கு மட்டும் சிறிது பருக்கைகளை தெளித்து திரும்பிவிட்டேன். (இதன் பின்னும் எறும்பு சாப்பிட மறந்தால் என்னவாகும் என்று யாராவது கேப்பிங்க?)

இப்படி பட்ட எனக்கு தான் தோன்றியது காதல் கடிதம் யோசனை. நான் இதுவரை கடிதமே எழுதியதில்லை. அப்புறம் எதற்கு காதல் கடிதம் என்று நீங்கள் இங்கு கேட்டே ஆக வேண்டும். அப்பொழுது தானே அடுத்த பத்தியை ஒரு பெண்ணைப் பற்றிய வர்ணனையில் ஓட்ட முடியும்.

வில் போன்ற புருவங்கள், மான் போன்ற மிரட்சியுடன் கண்கள் உஸ்ஸ்ஸ் அப்பா! சரிங்க மாத்திடுறேன். பார்லரில் 100 ரூபாய் கொடுத்து 7 செமீ நீளமும், அரை செ.மீ அகலமும் கொண்டு அளவெடுத்து தைக்கப்பட்ட புருவங்கள், இரண்டு பெண்டுலங்கள் போன்று நிற்காத துரு துரு விழிகள், Michelangelo இறக்கும் முன் செய்து வைத்த முடிக்காத சிலையின் மூக்கை பெயர்த்து அவள் கண்களுக்கு இடையே பொருத்தியது போல ஒரு மூக்கு, இவள் உதடுகளுக்கு கலர் டெஸ்டிங் செய்து இறைவன் நிராகரித்து வீசி எறிந்த துண்டங்கள் தான் ஸ்டாரிபெரியோ எனும் படி ஒரு உதடுகள் என அங்கம் அங்கமாக அடையாளம் காட்டுவதை விட இப்படிப்பட்ட அழகுடைய பெண்ணுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறாளே அந்த சந்தன நிற சல்வார் அவளுக்கு தாங்க இந்த கடிதம்! இல்லை கடுதாசி! இல்லை கடிதம்னே வைச்சுக்குங்களேன்.

அப்படி பட்ட பேரழகி இருக்கையில் அந்த சந்தன நிற சுடிதார் ஏன் என்று நீங்கள் கேட்காமலே சொல்லிவிடுகிறேன். ’அழகு என்பது’ என்று ஆரமிக்கும் ரொம்ப பெரிய சிந்தனைத்துவமான விஷயம் எல்லாம் ஒன்றும் இல்லை அந்த மூச்சுவிடும் ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட முயன்றால் இரண்டாம் ஆண்டில் படிக்கும் அவள் அண்ணன் வந்து தூரிகையை தூக்கி போட்டு மிதித்துவிடுவான் என்ற நியாயமான பயமே காரணம்.

சரி இம்முறை பெறுநரை முடிவு செய்தாயிற்று, அனுப்புர் யாரென்று அனைவருக்கும் தெரியும். வேற யாரு Yours Obediently நானேதான். ஆங்கிலத்தில் எழுதலாமா, தமிழில் எழுதலாமா என்று முதல் குழப்பம். என்னதான் Honey, sweetie pie, a rose is a rose, queen of my kingdom where am the only citizen என்று ஆங்கிலத்தில் சில பல வார்த்தைகளை வாரி விட்டாலும் 
இந்த tenseஇல் சொதப்பிவிடக்கூடும், மேலும் ஒரு ஒரு ஒரு… (ஓரளவுக்கு தெரிஞ்ச மொழி தமிழ் அதுல ஒரு வார்த்தை சிக்க மாட்டேங்குதே ஆங்ங்ங்ங் ஃபீலிங்க்ஸ்) பீலிங்க்ஸ் இருக்காது. அதனால் என் (தமிழ்த்) தாயை அழைத்தேன் என் உயிர் தீயை வளர்ப்பதற்கு.

சரி தமிழை அழைத்தாயிற்று. இனி

“என் கண்கள் சூரியன் வந்ததால் விழிக்கிறதா

இல்லை நீ கனவில் வந்த ஒளி தாங்காமல் விழிக்கிறதா?”

என மொக்கையாக பத்து  கவிதைகள் தேற்றி நடுவில் மானே பொன்மானே, தேனே உன்னால் இனித்தேனே என்று சேர்த்தால் ஒரு காதல் கடிதம் தயாராகிவிடும்.

18.07.2005
எட்டாவது நாளன்று ஒன்பதாவது கவிதையான

“உனை தட்டமாலை சுற்றிய அழகை பார்க்க
சுற்றிய பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறதோ!”

என குட்டிச்சுவரில் உட்கார்ந்து சிந்தித்த போது தான் சந்தன நிற சேலையில் அவள் வந்தாள் கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன். அவள் ஸ்டிக்கர் பொட்டுக்கு அடியில் இருந்த குங்குமம், நெற்றியின் உச்சிக்கு இடம் பெயர்ந்திருந்தது. நூலகம் கூட இல்லையே இது இடமாற்ற எட்டே நாட்களில் என்ன அவசரம் என என் உள்ளம் தத்தளித்தது, துடித்தது, புரண்டது, அழுதது.

என்னதான் கஷ்டமாக இருந்தாலும் பத்தாவது கவிதை சிந்திக்க வேண்டாம் என எனக்குள் இருக்கும் சோம்பேறி நான் சந்தோசமடைந்தான்.

16.07.2007
இப்படி ஒன்பதாவது கவிதையோடு முற்றுபெறாமல் போன காதல் கடிதம் இரண்டு வருடங்களாக என் நோட்டை (கண்ணை) உறுத்தி கொண்டே இருந்தது. ஒரு வழியாக நானும் மூன்றாவது வருடம் வந்தேன். சீனியர் என்ற அந்தப் பதவி, பவர் அதெல்லாம் அனுபவச்சு பார்த்தால் தெரியும்………………………………………………………………………………………………………………………………………………………………………………… 
இப்படி தமிழ் சினிமா அரசியல்வாதி வசனங்கள் எல்லாம் நிரப்பி வாசித்து கொள்ளுங்கள்.

அந்த நடமாடும் ஓவியத்தின் அண்ணன் கல்லூரியை விட்டு சென்றுவிட்டதால் இப்போது மீண்டும் அவள் ஆபத்தில்லா அழகாக தெரிய தொடங்கினாள். பத்தாம் கவிதையை எழுத என் பேனா பார்த்தன் விடுத்த அம்பு போல என் கையில் வந்து அமர்ந்தது.

”ஒரு கவிதை மேல் கவிதை எழுதும்
முதல் முட்டாள் நானாய்தான் இருப்பேன்!
ஏ கவிதையே! போய் உன் அக்காளிடம் சொல்
நடமாடும் கவிதையை என் இதயத்தில் எழுதிவிட்டேன் என்று”

என பத்தாவது கவிதையையும் ஒரு வழியாக பூர்த்தியாகிவிட்டது.
என்னதான் சுடிதார் போர்த்திய கவிதையின் அண்ணன் கல்லூரியை விட்டு போயிருந்தாலும் அவன் ஆங்காங்கே தென்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தியை காதில் போட்ட படியே இருந்தார்கள். தற்போது ஆளுங்கட்சியின் 140ஆவது வார்டின் இணை துணை வட்டத்துக்குள் வட்ட செயலாளர் வேறு ஆகிவிட்டதாக என் அடி வயிற்றில் திடமான சல்பூயிரிக் ஆசிட்டை சொட்டு சொட்டாக என் காது வழியே ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

”காதல் மூன்றாம் சுற்றில் முழுமை காணுமடா” என்று கமல் பாடியதை அப்படியே நம்பி கடிதத்தை கொடுத்துவிடுவது என முடிவு செய்தேன். நிற்க. என்ன இது சந்தனக் கலர் சல்வார் (சேலை), வில்லன் அண்ணனின் தங்கை என இரண்டு தானே என்று எல்லோரும் கேள்வி கேட்பீர்கள். இல்லை எனது மொக்கை விளக்கத்துக்கு பயந்து கொண்டு நீங்கள் கேள்வி கேட்காமலே இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு கணக்கு பதிவாளன் என்பதால் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியது எனது தொழில் தர்மம் ஆகிறது.

முதலாம் ஆண்டில் பார்த்த சந்தன சல்வாருக்கும் (சரி சேலைக்கும்), மூன்றாவது ஆண்டில் பார்த்த கவிதையின் அக்காளுக்கும், நடுவில் இரண்டாம் ஆண்டு என்று ஒன்று இருக்கிறது (இருந்தது) அல்லவா. அதில் பேருந்தில் வந்து போகும் போது பார்த்த கவிதையின் ஒன்று விட்ட அக்காள் இருந்தாள். ஆனால் நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அவள் மூன்றாம் ஆண்டு படித்திருந்த காரணத்தால் நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அவள் கல்லூரிக்கு வரவில்லை. இப்போது கணக்கு சரியாகிவிட்டது என நம்புகிறேன்.

சரி! மூன்றாவது சுற்றுக்கு வருவோம். இரண்டாம் சுற்று மிகவும் சுவாரசியமானது என்பதால் அதை தனி ஒரு பதிவில் பார்க்கலாம். காதல் கடிதம் தயார். அனுப்புனர் கூட அம்சமாக தயார், பெறுநர் யாரென்று மூன்று வருட போராட்டத்துக்கு பிறகு ஒரு முடிவும் செய்தாயிற்று இனி தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது மீடியம் மட்டுமே.

அதாவது அண்ணலிடம் (நானேதாங்க) இருந்து அவளுக்கு கடிதத்தை எப்படி அனுப்புவது என்பதே ஆகும்.

அந்த நேரம் பார்த்துதான் வந்தான் என் உயிர் தோழன்.

”டேய்! அவ சரின்னு சொல்லிட்டாடா. முதல் வருசத்திலேந்து பின்னாடியே சுத்தினதை ஓரக்கண்ணாலே பாத்து இருக்கா. நாளைக்கு படத்துக்கு போறோம்”

”யாரு?”

யாரென்று அவன் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டுமா? அவளே தான்! என் கையில் இருக்கும் காகிதத்தின் அக்காளே தான்.

இப்படியாக அந்த காதல் கடிதம் அனுப்பப்படாமலே காலத்தோடு கரைந்துவிட்டது. காமெடியனை ஹூரோவாக போட்டு ரிலீசாகத படத்தில் இருந்து காமெடி காட்சிகளை பிய்த்து எடுத்து, பஞ்சு பஞ்சாக தான் காமெடியனாக நடிக்கும் படத்தில் காமெடி டிராக்காக போன காட்சிகள் போல அந்த கவிதைகளும் ஆங்காங்கே சிதறி விட்டன.

03.01.2012

அலுவலகத்தில் மேனேஜரிடம் தினதிட்டுக்கள் வாங்கிய பின் புதுசா ஒரு trainee சேர்ந்திருக்காங்க ஒழுங்கா processஐ சொல்லிக் கொடு என சொல்லி அனுப்பினார்.

நான் இடத்துக்கு வந்த போது

“Excuse Me! I am the new trainee joined in your team. I was asked to join for the buddy up session…..”

என் விரல்கள் Ms-Wordஇல் நடமாடத் தொடங்கின.

“மான்கள் இப்போதெல்லாம் புல்வெளியில் இருப்பதில்லையோ!

இல்லை நிலாதான் வான் மறுத்து பார் வந்ததோ?”

7 comments:

  1. 'கமல் விளைவு' நிறையா தெரியுது! ;) கவிதைகள் அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது! நகைச்சுவையுணர்வு, உவமைகள் எல்லாம் வழக்கம் போல அருமை.

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க! உண்மையின் சாயல் நிறைய இருப்பதால் ரசிக்க முடிகிறது. நகைச்சுவையோடு சொல்லியிருப்பது சுவாரஸ்யம் :) ஆங்காங்கே பொன் மானே தேனே என்று கவிதைகளை தூவியிருப்பது அழகு!
    amas32

    ReplyDelete
  3. Haha!! Funny.. Ippadiyae ponaa unmaiyaana loverku eppo koduppa un kaadhal kadidhatha!??

    ReplyDelete
  4. இது ஹ்யூமரா ட்யூமரா? எனக்கு பிடிக்கலை.
    உன்னோட classical style இதுல சின்க் ஆகல..
    //keep trying keep on trying better luck next time (for both love and post)

    -- இதை ஒரு ஓட்டை ப்ளாக் ஓனராக சொல்லவில்லை. நண்பனாக சொல்லுகிறேன்

    ReplyDelete
  5. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. இடையிடையே வரும் நகைச்சுவைகள், கவிதைகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. உண்மையில் இங்க பின்னூட்டமிட எனக்கு கைகள் கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது. காரணம் நான் இன்னும் இந்த அளவிற்கு இலக்கியத்தில் வளரவில்லை என்பதே.

    மிக மிக ரசித்த பதிவாக இது :))

    ReplyDelete
  6. @பலராமன்: ரொம்ப நன்றி சகா! கமல் விளைவி தெரியும் அளவுக்கு அவ்வளவு குழப்பமாவா இருக்கு? :)
    @amas அட! உண்மை எல்லாம் இல்லம்மா! சும்மா ரீல் தான்!
    @supriya: It was for ur sister I saved tat letter! But even she broke my heart! :(
    @வேதாளம் ஒரு கவிதை கதை கலந்த சைக்கிள் பிக்‌ஷனை பதிவை ரசிக்க தெரியாத தமிழ் சூழலில் தான் நான் இருக்கிறேன் என்று நினைக்கும் போது என் ஆன்மா தனலில் இட்ட புழு போல துடிக்கிறது! ;)
    @செல்வு: சகா! என்ன இது? இலக்கியமா? உம்மையெல்லாம் பார்த்து inspire ஆகி எழுத தொடங்கியது தான் இதெல்லாம்!

    ReplyDelete
  7. நாட்டரசன் உண்மையிலே நல்லா இருக்கு.. நானெல்லாம் ப்லாக் delete பண்ணிடலாமுனு நினைக்க வச்சிட்ட.. அவ்வவ்

    ReplyDelete

வாங்க பழகலாம்