Thursday, October 11, 2012

கோபக்கார நாய்




சுமார் இரண்டடி உயரம். சற்று செம்பட்டையான நிறம். மேலே கறுப்பு கோட்டிங் அடித்தது போல ஒரு வர்ணம். நான்கு கால்களிலும் ஐந்து நகங்கள் வீதம் மொத்தம் இருபது நகங்கள். பூசலும் இல்லாது பூஞ்சையும் இல்லாது ஒரு மாதிரி சராசரி உடலமைப்பு. எப்பொழுதும் எதையோ தேடி தேடி அலுத்தது போன்ற ஒரு வெறுமை அதன் கண்களில் குடிகொண்டிருக்கும். பொதுவாக மிருகங்களின் கண்களை பார்க்கக்கூடாது என்பார்கள். குறிப்பாக மனிதனால் பழக்கப்படாத நாய்களின் கண்களை கூர்ந்து நோக்குவது அபாயம். அதனால் கண்களுக்கும் மேல் வர்ணனை அளிக்க சாத்தியமில்லாது போயிற்று.

அந்த தெருவில்தான் அதை பார்ப்பது வழக்கம். அந்த தெரு சற்று விசாலாமானது இரு பேருந்துகள் ஒரே நேரத்தில் அருகருகில் செல்லும் அளவுக்கு அகலமானது. அப்படி செல்லும் போது கூட சைக்கிள் செல்லும் வகையில் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் ஆட்டோக்கள் செல்வது வாடிக்கை. இதை ஒரு இயற்பியல் அதிசயம் என்று சொல்ல கேள்வி.

அப்படிபட்ட தெருவில் தான் அது இருந்தது. இல்லை வசித்தது. ஏனெனில் அந்த தெருவை தவிர அதை வேறெங்கும் பார்த்ததில்லை. அந்த தெருவின் நடுசென்டரில் இருக்கும் சிகப்பு வண்ணம் பூசிய வீட்டின் மூலையில் உள்ள குப்பைத்தொட்டியை கடக்கும் போது தான் அதை பெரும்பாலும் பார்ப்பேன்.

எப்பொழுது அதை கடந்தாலும் குப்பையில் உணவு தேடுவதை விட்டு நிமிர்ந்து என்னை பார்க்கும். நான் அதை ஒரு நொடி பார்ப்பேன். பின் பாராதது போல் தலையை திருப்பி கொள்வேன். ஆனால் அது என்னையே தீர்க்கமாக பார்த்து கொண்டிருக்கும். ஏனென்று தெரியவில்லை. என்னுடைய முகம் அதை கல்லால் அடித்த அந்த சிறுவனை ஒத்திருந்திருக்கலாம், மோட்டர் சைக்கிளை அதன் மேல் உரசுவது போல் சென்று ஹாரன் அடித்த அந்த மனிதர் போட்டிருந்த அதே பிராண்ட் வாசனை திரவியத்தை நானும் போட்டு கொண்டிருக்கலாம்.

ஏன் அப்படி நினைக்க வேண்டும்? ஒரு வேளை தன் பிஸ்கட்டில் சிறிது தந்த சிறுவனின் முகத்தை கூட என் முகம் ஒத்திருக்கலாம். அல்லது என்றோ டீக்கடையில் பன் வாங்கி போட்ட அந்த மனிதர் பயன்படுத்திய வாசனை திரவியத்தை நானும் போட்டிருக்கலாம். நல்லது நினைப்பதே நல்லது நடக்க வழிவகுக்கும்.

நாய் யார் கடந்து சென்றாலும் பார்க்கத் தானே செய்யும் என்று மூளை ஒரு தர்க்கத்தை முன் வைத்தது. ஆனால் எனக்கு முன் கடந்து செல்பவரை சுத்தமாக சட்டை செய்யவே செய்யாது. மக்கள் குறை கண்டுகொள்ளா ஆட்சியாளர்கள் போல அமைதியாகவே இருக்கும். நான் கடக்கும் போது மறுபடி பார்க்கும். அதே தீர்க்கமான பார்வை. நான் கடந்து சென்றவுடன் தன் வேலையை பார்க்க தொடங்கும்.

இவ்வாறே பேருந்தில் காணும் இளம் யுவதி கண்ணாளும் பார்த்தும் பார்க்காத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதை பார்த்தபடியே அந்த தெருவை கடப்பது வழக்கம்.

அன்றும் அப்படி கடக்க எத்தனிக்கையில் தெருவின் நுழைவிலேயே இருக்கும் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் அருகேயே அது நின்றிருந்தது. ஏனோ முகத்தில் கோபம். மூச்சிரைப்பு வேறு பலமாய் இருந்தது. தெருவின் நுழைவையே கண்களில் கோப அணுசக்தி தெறிக்க பார்த்து கொண்டிருந்தது. பொதுவாக அந்த குப்பைத்தொட்டியை தவிர அதை எங்குமே கண்டதில்லை.

இப்போது இந்த இடமாறுதலே எனக்கு லேசாக கிலியூட்டியது. ஒரு வேளை அந்த கல்லால் அடித்த சிறுவன், பைக்கால் உரசிய மனிதர் யாரோ சமீபத்தில் கடந்து போயிருப்பார்களோ? அவர்களை துரத்தி கொண்டுதான் அங்கு வந்து நின்றிருக்குமோ? அவனின் முகம் என்னுடையது போலவே இருக்குமோ? அதே வாசனை திரவியத்தை தான் நானும் பயன்படுத்துகிறேனோ? இப்போது இதை கடப்பது புத்திசாலிதனம் தானா?

ஒரு நாயின் தாக்குதலை சமாளிக்கும் அளவுக்கு என்னுடைய உடல் வலிமை வாய்ந்தது தான். கேவலம் இரண்டடி உயரம். நானோ கிட்டதட்ட ஆறடி. பாய்ந்து வரும் போது ரேம்போ படத்தில் ஸ்டலோன் அடிப்பது போல அடித்து விட முடியும். ஆனால் அவர் அடிப்பதை கூட திரையில் காட்ட மாட்டார்கள். அதனால் எந்த இடத்தில் அடித்தால் ஒரே அடியில் விழும் என்று தெரியாது.

ஓடுவதற்கு சாத்தியம் இருக்கிறது. என்னால் வேகமாக ஓட முடியும் என்ற ஒரு சாத்தியம் தோன்றியது. ஆனால் நாயின் வேகம் என்னை விட அதிக வேகமாக இருந்தால் என்ன செய்வது? இப்படி ஒரு சின்ன SWOT ஆராய்ச்சி செய்து பார்த்தேன். எப்படி பார்த்தாலும் நாய் வென்றுவிடும் என்றே என் மூளை எச்சரித்தது.

மறுபடியும் அதை பார்த்தேன். அதே கோபம். அதே பார்வை. அதே முன் வரிசை பற்கள்.

இந்த தெரு இல்லாது போனால் இன்னும் ஒரு கிலோமீட்டர் சுற்றி நடக்க வேண்டும். அவ்வளவு தானே? திரும்பி நடக்க தொடங்கினேன்.
அடுத்த நாள். மீண்டும் அந்த தெருவை கடக்கும் நேரமும் வந்தது.
டிரான்ஸ்ஃபார்மர் அருகே அந்த நாய் இல்லை. வெள்ளை வண்ணம் பூசிய அந்த வீட்டின் திண்ணையிலும் இல்லை. குப்பைத் தொட்டியிலும் இல்லை. எங்குமே இல்லை. ஒரு வேளை என் வருகைக்காக எங்கோ மறைந்து காத்திருக்கறதோ, கொரில்லா தாக்குதல் எல்லாம் கற்றிருக்குமோ என்ற பயம் முளைவிட்டது. ஆனால் தெருவை கடக்கும் வரை எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.

இப்போதெல்லாம் தினம் அந்த தெருவை கடந்து கொண்டேதான் இருக்கிறேன். அந்த நாயை மறுபடியும் பார்க்கவே இல்லை. அதன் கோபத்தின் காரணமும், என்னை மட்டும் பார்க்கும் அந்த பார்வையின் அர்த்தமும் எனக்கு தெரியப்போவதே இல்லை.

Wednesday, October 3, 2012

பல் துலக்குதல்


அரசு அலுவலகங்களில் அனைத்து ஊழியர்களும் வந்து அமரும் நேரமான நண்பகல் 12 மணியை எனது செல்போன் காட்டி கொண்டிருந்ததுமூன்று நாட்களுக்கு முன் நள்ளிரவில் இரண்டு நிமிடங்கள் பெய்த மழையின் எந்த தடயமும் இல்லாத காரணத்தால் சூரியன் சுள்ளென சுட்டுகொண்டிருந்தான்.

எழுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என மகிழ்ந்து தூக்கத்துக்கு ப்ரோப்பஸ் செய்ய கடவுள் அதை டிஸ்போஸ் செய்துவிட்டார்மேனஜர் அழைக்கிறார் என்றது கைப்பேசி.

"ஹலோ"

"ஹலோகுட் மார்னிங்"

"குட்மார்னிங் ௴௴௴௴"

"தூங்கிட்டு இருந்தியா ௳௳௳௳"

"இல்லை ௴௴௴௴சொல்லுங்ககாலையில் 5 மணிக்கு வந்து படுத்தவன் இந்நேரத்துக்கு கபடியா ஆடிட்டு இருப்பேன்இருந்தாலும் இல்லேன்னு தான் சொல்லனும்

"நேத்து கேன்சல் ஆன கால் இன்னிக்கு நம்ம நேரம் மதியம்
மணிக்கு வைச்சிருக்காங்கஇப்பதான் மெயில் பார்த்தேன்சீக்கிரம் லாகின் பண்ணிடு."

"அப்படியா.கே ௴௴௴௴"

"சரி சாயந்திரம் பார்ப்போம்."

"அப்போ மதியம் நீங்க வரலையா?"

"Come on. It is time for you to take the ownership. You can do this. You are getting a chance to prove your leadership skills. This will be a highlight in APPRAISAL falling this month. ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ. ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA.Who let the dogs out. Whoooo? whoo? whoo? whooo? India loses the semifinal berth even after beating SA."

" சரிஅப்போ நானே பாத்துக்கிறேன். Bye." Appraisal என்ற வார்த்தைக்கு பிறகு அவர் எது சொன்னால்தான் என்னஇம்முறை வரும் சம்பள ஏற்றத்தை வைத்து நெடுநாள் கனவான S2விற்கான EMI ஆக மாற்றிவிடுவதாய் என் மேல் நானே என்னிடம் சத்தியம் செய்திருந்தேன்.





எழுந்தேன்பல்துலக்கும் ப்ரஷ்ஷை எடுத்தேன்பெரிய கரும்பை ஒரே கடியில் உரித்தெடுக்கும் வலிமையுள்ள பற்களை தர வல்ல பற்பசையை பர்ஷ்ஷின் மேல் பிறந்த குழந்தையின் விரல்நகம் அகலமும்கொசுவின் உயரமும் அளவுக்கு ப்ரஷ்ஷின் மேல் வைத்தேன்.
அப்போது கருப்பன் உச்சக் குரலில் சொன்ன வார்த்தைகள் "வவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்"

இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் என்னவென்றால் "யாரோ வீட்டுக் கதவின் வெளிப்புறத்தில் நின்றுமின்சார தொடர்பு இல்லாத அழைப்பு மணியின் பொத்தானை அழுத்திஎந்த சத்தமும் எழாததை கேட்டு உன் பெயரை கூப்பிட்டுகிறார் . நீ இப்போது எழுந்து செல்லவில்லையெனில் நான் இந்த வாக்கியத்தை இதே குரலில் தொடர்ந்து சொல்லிகொண்டே இருப்பேன்." என்பதே
முப்பது நொடிகள் கடந்த பின்அந்த வாக்கியம் நான்கு முறைகள் குலைக்கப்பட்ட பின்வராண்டாவை கடந்து கதவுக்கு சென்றபின்கதவை திறந்த பின்வந்தவர் கொரியர் கொடுக்க வந்திருக்கிறார் என நான் அறிந்த பின் என்னை பார்த்து அந்த கேள்வியை அவர் கேட்டார்

"என்ன சார் தாடியெல்லாம் வைச்சுட்டிங்க?"
கையில் இருந்த ப்ரஷ்ஷை வாயில் வைத்து,  அவர் தந்த ஜாமட்ரி பாக்ஸ் அளவுள்ள எந்திரத்தில்பத்து துடைப்பக் குச்சிகள் பருமனுள்ள ஒரு பேனா போன்ற பொருளால் என் பேரை சிகப்பு கொண்டையும் வெள்ளை உடலும் கொண்ட சேவல் கிறுக்கினால் எப்படி எழுதுமோ அதை விட அழகாக எழுதிஅவர் தந்த தபால் உறையை பற்பசையில் படாது வாங்கிஇயந்திரத்தையும்பேனாவையும் திருப்பி கொடுத்துஒரு கையில் தபாலும்மறுகையில் ப்ரஷ்ஷீம் வைத்துகொண்டு :)உடன் நான் சொன்ன பதில்

"சும்மாதாண்ணா." 

உறையை திறந்து வரும் வழியில் இருந்த குப்பை கொண்ட ப்ளாஸ்டிக் கவரில் இட்டு பல்லை தேய்த்து கொண்டே படித்த கடிதத்தின் கரு மிக எளிமையானது.
அந்த நேரத்தில் ஒரு ஷேர் சுமார் 265 ரூபாய்க்கு பங்குசந்தையில் வாங்கி விற்றுகொண்டிருக்கும் ஏர்டெல்லின் பிராட்பேண்ட் இணைப்பை தொடர்ந்து நான் தொடர்ந்து வைத்து கொள்ள வேண்டுமானால் மேலும் ஐநூஊஊஊஊஊறு ரூபாய் மாத வாடகையில் சேர்த்து கொடுக்க வேண்டும்அதற்கு அவர்கள் கூடுதலாக 2 ஜி.பி அதிவேக இணைப்பாக தருவார்கள்இதை விலாவாரியாக எறும்பு மொய்க்கும் அளவுக்கு இனிப்பான ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.
இப்போது வாயில் நுரை தள்ள தொடங்கியதுபற்பசையின் விளைவுஅவ்வளவே.

"தம்பிஒரு நிமிஷம் அப்படியே மேல வாயேன்." வாயில் பிரஷ்ஷீம்கையில் கடித சகிதமாக மேலே சென்றேன்தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் போன முறை அழைத்த போது வாயில் இட்ட சோற்றை மென்று கொண்டே ஓடிய வரலாறெல்லாம் எனக்கு இருக்கிறது.

"இப்பதான் எழுந்தியாபாவம் நீயும் என்ன பண்ணுவநேரங்கெட்ட நேரத்துல வேலைகாலையில வரும் போதே பார்த்தேன்சரி தூங்க போறவனை தொந்தரவு பண்ண வேண்டாம்னு அப்பவே கூப்பிடலைவீட்டு வரி ஏறிபோச்சுதண்ணீர் வரி ஏத்திட்டாங்கஇந்த மாசத்துலேந்து  வாடகை கொடுக்கும் போது 500 ரூபாய் சேர்த்து கொடுத்துடு.  அஆஇஈஉஊஎஏஐஒஓஒள கஙசஞடணதநபமயரலவழளறன  அட்றா அட்றா நாக்க முக்கா நாக்க முக்காகாவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு."

"சரிங்க".

கீழே வந்து பல் தேய்த்தலை முடித்த பின்துண்டை எடுத்து குளிக்க செல்லலாம் என்ற போது மறுபடியும் கருப்பன் பேசத் தொடங்கினான். "வவ்வ்வ்வ் ஊஊஊஊஊ"

Monday, September 3, 2012

சிகப்பு


ரத்த சிகப்பாய் இருந்தது வானம். சூரியன் இன்று சென்னை பகுதியில் இருந்து எத்தனை டி.எம்.சி தண்ணீரை ஆவியாக மாற்ற வேண்டுமென்று அடிவானில் யோசித்து கொண்டிருந்தான். கோயம்பேட்டின் பேருந்துக்கு அடியில் வைத்திருந்த குங்குமம் பூசிய எலுமிச்சை பழம் சாதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. சாலைகள் நடுவில் நட்டு வைக்கப்பட்ட சிக்னல் மரங்கள் சிகப்பு விளக்குகளின் ஒளியை வானத்தில் இருந்து கடன் வாங்கிக் கொண்டிருந்தது.

சிகப்பு தான் எத்துணை அழகான நிறம். அதனால் தான் ஆபத்துக்கு அடையாளம் ஆக்கிவிட்டார்கள் போலும். அழகும் ஆபத்தும் ஒருங்கே இருக்கும் பகுதிக்கு கூட சிகப்பு விளக்கிட்டு விலக்க இயலாது சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டார்கள்.

வானத்தில் இருந்த சிகப்பை மஞ்சள் ரப்பரால் அழித்து தன் ஒளி 
ஆக்ரமிப்பை நடத்த சூரியன் தொடங்கியிருந்தான். அந்த விடியல் ஒருவருக்கு லாபத்தையும், சிலருக்கு நஷ்டத்தையும், ஒருவருக்கு மரணத்தையும், சிலருக்கு வேதனையையும் கொண்டுவரப்போகிறது என்று எழுதப்பட்டிருக்கிலாம். எழுதப்படலாம்.

சூரியன் உச்சிக்கு வந்திருந்தான். 12 மணிக்கு “சத்தம் போடு” என்று நான் போட்ட கட்டளையை என் அலைபேசி ஒரு வேலைக்காரனுக்கே உரித்தான பாவனையோடு முதலில் மெல்லமாக பின் கடமையை உணர்ந்து உரக்க கத்த தொடங்குகிறது. விடிந்து விட்டது போலும்.

அமெரிக்க வாழ்க்கை சுகமானது என்று நீங்கள் கேள்விபட்டு இருக்கக் கூடும். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் உரிமை. ஆனால் 13.0810° N, 80.2740° E என்று புவியியல் வல்லுனர்களால் குறிக்கப்படும் சென்னையில் வசித்து கொண்டு GMT -05:00 நேரக் கோட்டின் அடிப்படையில் வாழும் அமெரிக்க வாழ்க்கையில், நள்ளிரவிலும் சூடாக கிடைக்கும் இட்லி சாம்பாரை தவிர சிலாகிப்பதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது.

இரைப்பையிலிருந்து ஒரு மெல்லிய ஓசை வரத்தொடங்கியது. நிச்சயம் நேற்று இரவு இல்லை இன்றைய காலை, சரி எனக்கு நேற்று இரவு உங்களுக்கு இன்றைய காலை, இல்லை இல்லை, ஐயோஓஓ, குழப்பம் வேண்டாம் இந்திய நேரப்படி காலை 04:00 மணிக்கு வழக்கமாக இரைப்பைக்கு இடும் ரொட்டித் துண்டுகளை இடாமல் விட்டதால் இன்றைய முதல் கானமே பசியின் இசையமைப்போடு தொடங்குகிறது.

சுத்தம் சோறு போடும் என்றாலும் சோறு தின்ன சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மொழிக்கேற்ப பல் துலக்கி உணவகத்தை நோக்கி நடந்தேன். வெளியே வந்த போதே கவனித்திருக்க வேண்டும். தெரு முனையில் கண்ணாடி டம்பளரில் பழுப்பு பானம் விற்கப்படும் தேநீர் நிலையத்தின் நாதாங்கியில் பூட்டில் பிரதிபலித்த சூரிய ஒளி எதிரில் இருக்கும் வேப்ப மரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கொண்டிருந்தது. இப்படியே அண்ணாச்சி மளிகைக் கடை, லாரி டயரை பெயர் பலகையாக கொண்ட மெக்கானிக் கடை என சகல கடைகளின் பூட்டுகளும் குடை இல்லாது வெயிலில் தொங்கிக் கொண்டிருந்தன.

நிச்சயம் ஏதோ பந்தாக இருக்கவேண்டும். விளையாட்டு தனமாக கிரிக்கெட் பந்தா கால் பந்தா எனக் கேட்டு கடுப்பேற்றாமல் கடையடைப்பு என்று படித்து கொள்ளுங்கள். என் எஜமானன் என் சட்டை பையில் இருந்து பாடத் தொடங்கினான்.

“ஹலோ”

“டேய் உன் ப்ளட் க்ரூப் பி நெகட்டிவ் தானே“

“ஆமாம்! என்னாச்சு……”

“உடனே அமிஞ்சகரை கிளம்பு. 5 வயசு பொண்ணு மாடியிலேந்து விழுந்துட்டாளாம் உன் க்ரூப் தான். சீக்கிரம் போ. ஹாஸ்பிட்டல் ZZZZZZ. 
மத்த தகவல் எல்லாம் மெசேஜ் அனுப்புறேன். ரொம்ப அர்ஜெண்ட் கிளம்பு.”

பசியை மரண பயம் வென்றது. வீடு திரும்பினேன். பைக் சாவியை எடுத்தேன். பர்ஸ் தனது தற்போதைய கொள்ளளவு ரூ.50 என்றது. வீட்டின் 
பூட்டு. சாவி. செருப்பு. பைக். Self starterஇல் கட்டை விரல் ஆக்ஸிலிரேட்டரில் உள்ளங்கை. லஸ் சிக்னல். பச்சை. ராயப்பேட்டை சிக்னல் பச்சை. பச்சை. பச்சை. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி. J. தலை கோதுதல். பச்சை. ஜெமினி சிக்னல் பச்சை. பார்க் ஹோட்டல் சிக்னல். சிகப்பு.



“யோவ். பச்சை சட்டை. உன்னதான். வண்டிய ஓரம் கட்டு”

“சார். லைசன்ஸ் இருக்கு. எல்லா டாகுமெண்ஸீம் இருக்கு. ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்.”

“ஏன் சீஃப் மினிஸ்டரை பார்க்க போவேண்டியது தானே? வண்டிய ஓரம் கட்டுன்னா ஓரம் கட்டு.”

அவர் தன் கடமைகளை முடித்து கொண்டு என்னை நோக்கி வந்தார்.

“எந்த ஏரியா?”

“மைலாப்பூர்.”

“எங்க வேலை பாக்குற?”

“௴௴௴௴௴௴ஊஊஊஊ”

“அங்க வேலை பாத்தா ஹெல்மெட் இல்லாம வருவியா? ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துவியா?”

“இல்ல சார். ஹாஸ்பிட்டல் போகனும். ரத்தம் கொடுக்க போயிட்டு இருக்கேன். ரொம்ப அவசரம்.”

“ஹெல்மெட் இல்லாம போனா உனக்கு யாராவது ரத்தம் கொடுக்கனும்.”

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.
அலெக்சாண்டரின் (அதான் அவர் நெஞ்சில் இருந்த பெயர் பலகையில் எழுதியிருந்தது.) மொபைல். எடுத்து கட் செய்தார்.

“சார் அவசரத்துல கிளம்பிட்டேன்.”

“எல்லாருக்கும் அவசரந்தான்யா. லைன் கிராசிங் 400. ஹெல்மெட் வேற இல்லை அதுக்கு 200. மொத்தம் 600 கட்டிட்டு போ

“சார் அவ்வளவு எல்லாம் காசு இல்ல சார். ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன் சார். விட்டுங்க சார்.”

“ஃபைன் கட்டு. விடுறேன்.”

“சார் சார்”

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” சிகப்பு பொத்தான்.

“சரி எவ்வளவு வைச்சிருக்?”

“50 ரூவாய்தான் சார் இருக்கு”

“ATM card இருக்குல்ல?”

“சார் மாசக் கடைசி வேற. ஹாஸ்பிட்டல் போகனும் சார்.”

“சரி லைன் கிராசிங் 400 ஹெல்மெட் இல்லை 200. யோவ் அந்த மெஷினை இங்க கொடுய்யா.”

“சார். ப்ளீஸ் சார். 5 வயசுக் குழந்தை சார். மாடியிலிருந்து விழுந்துட்டா. ரத்தம் கொடுக்க போயிட்டு இருக்கேன் சார்.”

“தச் தச் தச்! அப்படியா. சரி கிளம்பு.”

“தேங்க்ஸ் சார்.”

“யோவ்! அந்த 50 ரூவாயை கொடுத்துட்டு போ. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். போன வாரம் பாடி மெயின் ரோடுல ஒரு லாரிக்காரன் பைக் மேல மோதினான். உன் வயசு பையன் தான். ஸ்பாட் அவுட் ஒழுங்கா சிக்னல் எல்லாம் பாத்து போ.”

நாடாளுமன்றம் எனது பர்சிலிருந்து அவர் பாக்கெட்டுக்கு குடி பெயர்ந்தது.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.” பச்சை

நொய் நொய்ன்னு என்ன பதினஞ்சு தடவை கால் பண்ணிட்டு. உங்க அம்மா வந்திருக்காங்க கோதுமை ப்ரெட் வாங்கிட்டு வரணும், அதானே?!”

“என்னங்க! ஷ்ருதி ஸ்கூல்ல….”

“ஷ்ருதி ஸ்கூல்ல… என்னாச்சு?”

“மாடியிலேந்து விழுந்துட்டாங்க. அமிஞ்சகரை ZZZZZZ ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்கோம். ரொம்ப நேரமா உங்க மொபைலுக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன்.”

அடுத்து இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ் சிக்னல். பச்சை.