Wednesday, December 28, 2011

ரீபோக்கும் பூமரும்


1
"அப்பா அந்த சூயிங்கம் வேணும்!"
"அது உடம்புக்கு கெடுதல் டா செல்லம்!"
"அதெல்லாம் இல்லை! தோனியே அந்த சூயிங்கம் போட்ட அப்புறம் தான் சிக்சரே அடிக்கிறார்! எனக்கு வேணும்!"
"அதெல்லாம் விளம்பரம்டா கண்ணா. சும்மா! அதை எல்லாம் நம்பக்கூடாது!
ஹீம்! ஹீம்! பபிள்கம் வேணும்!"
அடி! வாயை மூடு!"
2
"மச்சி! நம்ம செட்டில் முதல் முதலா ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி ஷீ வாங்கி இருக்க கலக்கல் மச்சி!"
"மக்களின் வாழ்க்கை தரம் உசந்துடுச்சுடா! சும்மாவா சொன்னாங்க நுகர்வோர்களின் வாங்கும் திறன் அதிகமாயிடுச்சுனு!"
"டேய்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குப்பையை தூக்கி ஜன்னல் வழியா கீழப் போடேதுன்னு!"
"மூவாயிரம் ரூவாய்க்கு ஷீ வாங்கி இருக்கேன்! இந்த பொட்டிய தூக்கி கீழே விசிறலேன்னா அப்புறம் என்னடா கெத்து! சும்மா இரு! குப்பை தானே!"
"சரி! நாம படத்துக்கு போலாம் வா! டைம் ஆயிடுச்சு!
புது ஷீ! புது படம் கலக்குற மச்சி பிரமாதம்!"
3
"என்னாச்சுடி புள்ளைக்கு! ப்ளாஸ்திரி எல்லாம் போட்டு இருக்கு?
வெளியதாங்க விளையாடிட்டு இருந்தான். தீடீர்ன்னு சத்தம் போய் பார்த்தா கீழே விழுந்து கிடக்கான்!"
"எப்படி திடீர்னு விழுவான்? அவன் என்ன நடக்கத் தெரியாத குழந்தையா?
எவனோ ஷீ பொட்டிய தூக்கி வீசியிருக்கான்! அதுல இருந்த பிளாஸ்டிக் கவர் மேல காலை வைச்சு வழுக்கி விழுந்துருக்காங்க"
"சே! அறிவு கெட்ட ஜென்மங்க! ஏன் கண்ணா ரொம்ப வலிக்குதா?"
"ஆமாப்பா! ஹீம் ஹீம்!"
"சரி வா! வெளிய போலாம்! அப்பா உனக்கு சூயிங்கம் வாங்கித் தரேன்!"
4
"செம படம் இல்ல மச்சி!"
"ஆமாடா!"
"வா அப்படியே பீச்சுக்கு போயிட்டு சாப்பாட்ட முடிச்சுட்டு ரூமுக்கு போலாம்!"
"சே! பாக்கெட்டுல எவ்வளவு குப்பை! பார்க்கிங் டிக்கெட்! சினிமா டிக்கெட்!"
"டேய் எத்தனை தடவை சொல்றது குப்பையை எல்லாம் கண்ட இடத்துல விட்டெறியாதன்னு!"
"போடா திருத்த வந்துட்டான் விவேகானந்தன்."
5
"ஹய்யா! பபிள்கம் சூப்பரா இருக்குப்பா!"
"கால் ரொம்ப வலிக்குதாப்பா!"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை! இங்க பாக்குரியா நான் எவ்வளவு பெரிய முட்டை விடுறேன்னு!"
"ஹய்யோ! எவ்வளவு பெரிசு! சரி விளையாடினது போதும்! பபிள்கம்மை துப்பிட்டு வா! நாம ஜாக்கிசான் கார்ட்டூன் பாக்கப் போகலாம்!"
"இன்னும் கொஞ்ச நேரம்பா! ப்ளீஸ்!"
"வேணாம்டா சொன்னா கேக்கனும் இல்ல! அப்பதான் அப்பா நாளைக்கும் வாங்கித் தருவேன்!"
"பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூச்ச்ச்ச்ச்! ஹய்யா எவ்வளவு தூரம் போச்சு பாத்தியா?"
"அட! ஆமாம்! நாளைக்கு இதை விட தூரமா துப்பலாம் வா!"
6
"சே! பீச்சுக்கு வாலைன்டேன்ஸ் டே அன்னிக்கு போகவே கூடாதுடா!"
"கரெக்டா சொன்னே! நான் உன் மூஞ்சியபாத்துட்டு! நீ என் மூஞ்சியபாத்துட்டு! எத்தனை நாளைக்கு தான் இப்படியே…."
பச்சக் பச்சக் பச்சக்
"என்னடா குனிஞ்சு பாக்குற!"
"இல்ல! என்னமோ ஷீவில் என்னவோ ஒட்டினா மாதிரி இருந்துச்சு! இருட்டுல வேற என்னன்னு தெரியல! லைட்ட போடு"
"ஒரு ஷீவை வாங்கிட்டு இன்னும் பேங்க் லாக்கரில் தான் வைக்கல!
காலையில் எழுந்து பாத்துப்போம் விடு!"
"டேய்ய்ய்ய்! நான் நேத்து நைட்டே சொன்னேன் இல்ல! இங்கப் பாரு எவனோ சூயிங்கம்மை தின்னுட்டு படியில துப்பி இருக்கான்! அதைத் தான் மிதிச்சு இருக்கேன்!"
"அச்சோ! புது ஷூவிலா டா?"
"அடப் போடா! இப்போ காஞ்சு வேற போச்சு! சுரண்டி எடுத்தா பேஸ் வேற நாஸ்தி ஆயிடும்! சே!"

7
"என்னடா பழக்கம் இது? எப்பப் பாத்தாலும் எல்லாத்தையும் தூரத்துல துப்பிகிட்டு?"
"அடப் போம்மா! இதுக்கே இப்படி சொல்ற! நேத்து நான் பபிள் கம்மை எவ்ளோஓஓ தூரம் துப்பினேன் தெரியுமா அப்பாகிட்ட கேட்டு பாரு!
என்னங்க இது?"
"அட விடுடி! ஒரு ரூபாயுக்கு கம் வாங்கி இருக்கேன்! அப்படி துப்பலைன்னா என்ன சந்தோசம்! சும்மா இரு! குப்பை தானே….."

Saturday, December 3, 2011

பிச்சைக்காரன்



அவன்! மரியாதை இல்லாமல் தெரிந்தாலும் அவனை அப்படி குறிப்படுவதுதான் சரி. அவன் மேல் இருக்கும் அந்த ஈன உணர்வு தான் அவனுடைய பலம்.

ஆதவனை நம்பி ஆயிரம் கோடி பேர் இருந்தாலும் தன் முதல் ஒளியை அவனிடம் அனுப்பி அவன் முகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த பின் தான் மற்றவருக்கு தன் ஒளியைக் கொடுக்கிறான்.

அவனது வீடு விலாசம் இல்லா விசால எல்லையுடையது. எண்ணிக்கை இல்லா அறைகள். ஒரு இரவு அவன் தூங்கிய அறையில் அடுத்த நாள் அவன் நுழையும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு!

துயில் கலைத்து, தன் காவல் நாய்களை அப்புறப்படுத்திய பின் தன் உத்தியோகமான உதவி வேண்டுதலை செய்ய தன் முதலாளிகளை தேடிச் செல்ல ஆயத்தம் செய்கிறான். தன் வேண்டல் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் எப்போதும் சோகமுகத்துடனும் அழுக்காடைகள் உடனும் இரத்தலைத் தொடங்குகிறான்.

காலை உணவு தேவையென வயிறு அவனிடம் இரந்தபின் வசந்தம் உணவகம் நோக்கி தன் பயணத்தை செலுத்துகிறான். இந்த தெருவுக்கே முதலாளியான இவனைக் கண்டவுடன் உணவக முதலாளி கல்லாவுக்கு வரவு இல்லாமல் வந்த இந்த வாடிக்கையாளனுக்கு ஒரு பொட்டலம் மடித்து தயாராகவே வைத்திருக்கிறார்.

சிற்றுண்டி உண்டவுடன், அகிலத்தை ஆளும் ஈசன் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி அவன் பயணம் தொடர்கிறது. ஆலயத்துக்கு செல்வது படமாடும் தெய்வத்தை வேண்டி தன் துன்பம் விலக்க அல்ல. நடமாடும் தெய்வங்களை ஈந்து தன் தனம் பெருக்க. உலோகம் ஓட்டை உரசுகிறது

மனகனத்தை இறக்கி வைத்தவர் இவன் கனத்தை ஏற்றிய பின் கனம் அனைத்தும் தன் மீது கொண்ட ஈசன் மதிய துயில் கொள்ள வேண்டுவதால் அங்கிருந்து நகர்ந்து அன்னப்பூரணி உணவகத்தை அடைகிறான். கண்டவுடன் அனைவரும் விலகி ஒதுங்க கல்லாப் பெட்டியின் பாதுகாவலர் அலுப்புடன் இவனை நோக்க தன் தலை சொறிந்து இறை தரிசனத்தை நெடுநேரம் கொடுத்தபின் அன்னலஷ்மி இவனுக்கும் அருள் பாலிக்கிறாள்.

அன்னலஷ்மியையும், தனலஷ்மியையும் தன் கிழிந்த கிழியாத என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் இருக்கும் தன் துணி கஜானாவில் பாதுகாத்து வளநாடு பூங்காவுக்கு உலா செல்கிறான். அன்னலஷ்மியை தரிசித்துவிட்டு, தன் தனத்தையெல்லாம் சரிபார்த்தபின் அருகில் இருக்கும் அந்தப் பேருந்து நிலையம் நோக்கி அவன் கால்கள் செல்கின்றன.

அலுவல்கள் முடித்து வீடு திரும்பும் மக்களிடம் சோர்ந்த விழிகாட்டி, கிழிந்த உடைகாட்டி அவர்கள் மனிதநேயத்தை உரசிப்பார்க்கிறான். 

உலோகத்தின் சங்கீதம் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மனிதத்தை போதுமளவு என்று நோக்கியபின் மீண்டும் ஈசன் வீட்டின் வாசலுக்கே வருகிறான். ஈசன் உண்டி நிரப்பி வெளிவருவோர் சிலர் இவன் உண்டிக்கும் உதவுகின்றனர். ஆண்டவன் அருள் விற்று வியாபாரம் மூடிய பின், பீடி வியாபாரம் செய்யும் கடைக்குச் சென்று அவன் வியாபாரத்துக்கு உதவுகிறான். இங்கு அவன் சோர்ந்த விழிகளோ, கந்தலாடையோ, சுருங்கிய தேகமோ, அவன் சிரிப்பில் தெரியும் இறைவனோ உதவவில்லை. உலோகமும் காகிதமும் தான் உதவுகின்றன. வாழையிலைக்குத் தான்  வாழ்த்துக்கள் தேவை புகையிலைக்கு எதற்கு புண்ணியமெல்லாம்?

இவன் வீட்டின் உச்சியில் இரவு வெளிச்சத்துக்கு தொங்கவிடப்பட்டிருக்கும்
சந்திரனும் நட்சத்திரங்களும் ஒருங்கே ஒளி வழங்க ஈன்ற செல்வத்தைக் கொண்டு வாங்கிய சாராயத்தையும் குடித்து விட்டு அடுத்த நாளைக்கான அலுவல்களை மனதில் அசைப் போட்டபின் நித்ரா தேவியிடம் சரண் புகுகிறான் அந்தப் பிச்சைக்காரன்.