Friday, September 16, 2011

இன்று அவள் பிறந்தநாள் அல்ல! மலர்ந்த நாள்!

மலருக்குள் மலர்கள் சாத்தியமா என எக்காளமிட்டவர் நீ முதல் கண் திறந்தபோது மூச்சின்றி நின்றனர்!

பிறந்த பின் சீனி கொடுத்தார்களாம் உனக்கு அன்று முதல்தான் சர்க்கரை தித்திக்க தொடங்கியதோ!

நிமிர்ந்து உன் தாய் முகம் முதல் பார்த்ததாலல்லவா அவளுக்கு சொர்க்கவாசம் சாத்தியமாயிற்று!

நீ முதலில் தவழ்ந்தபோது அல்லவா பூமாதேவி பூப்படைந்திருப்பாள்?

நீ நவின்ற முதலெழுத்து தான் ஆயுத எழுத்து! எத்தனைக் கொலைகள் செய்தாயடி ஓரெழுத்தில்!

உண்ணும் தானியத்தில் உண்பவர் பெயர் எழுதினான் இறைவன்! நீ முதல் அமுதுண்ட போது அதில் இறைவன் தன் பெயர் எழுதினான் தெரியுமா?

நாமிருவரும் ஒரே மாதிரி சீருடை அணிந்ததால் சனி ஞாயிறு கூட பள்ளிச்சீருடை களைய மறுத்தேன்!

கடலை மிட்டாயயை காக்காய் கடி கடித்து உன் தோழிக்கு கொடுத்தாயே! அந்த தோழியாக நான் இருந்திருக்க கூடாதா?

கீதை சொன்ன கிருஷ்ணன் இன்று இருந்திருந்தால் சொல்லி இருப்பான் “என் கடன் உனைக் காதல் செய்வதே என்று”!

படைப்பெனும் செய்முறை தேர்வில் கடவுளின் முழு மதிப்பெண் நீ தான் பெண்ணே!

உனைப் படைத்த அன்றுதான் முதலில் மது அருந்தினானாம் கடவுள்! அதோடு மதுவை மறந்தான் இந்த மாதுவைக் கண்டு!

நீ பிறந்தன்று மிக அழகான சொர்க்கம் விஸ்வர்மாவை வேலையை விட்டு நீக்கினான் இந்திரன்! பூமி சொர்கத்தை விட அழகானதால்!

உந்தை சொல்கிறார் வீட்டுக்கு Interior Decoration செய்ய வேண்டுமென்று! நீ வீட்டில் இருப்பதை விட சிறந்த Interior Decorationனும் உண்டோ!


நீ உந்தாய் கர்பத்தில் இருந்த போது அவள் புளிப்புண்ண மாங்காய் உண்டு ஏமாந்த கதை எனக்கும் தெரியும்! சாம்பல் கூட சர்க்கரைதானாம்!

உன் கைப்படாமல் மிளகாய் எல்லாம் மறைகிறதாம்! அதன் பிறவிப்பயனான காரம் தருவதை அதனால் அடையமுடியாமல் இறப்பதால்!

நான் உனை முதலில் கண்டபோது பூக்கள் உதிரவில்லை! தென்றல் வீசவில்லை! மழை பொழியவில்லை! ஆயின் நான் ஆவியுடனே மறுபிறவி அடைந்துவிட்டேன்!

தங்கத்துக்கு சுவை உண்டா என்பவர்கள் உன் கைபட்ட உணவை ஒரு முறை சாப்பிட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்!

உன் வீட்டு குப்பைத்தொட்டியில் நீ கடித்து துப்பிய நகங்கள் தான் இளவரசிகளாம்! உன் தலை உதிர்ந்த முடிதான் பேரரசியாம்!

உன் அம்மாவுக்கு சர்க்கரை நோய் என வருந்தினாய்! பைத்தியமே உனைச் சுமந்ததால் தான் அது வந்ததென என்று உணர்வாய்?

அவளின் புன்னகை தான் பற்களால் எழுதப்படும் ஒரே கவிதை!

தங்க விலையேற்றம் எனை பாதிக்கவில்லை நான் எப்போதோ ஐம்பது கிலோ தங்கத்தை பத்திரப்படுத்திவிட்டேன் உனை என் இதயத்தில் பூட்டியதின் மூலம்!

மற்றவர் கோவிலுக்கு செல்வது கடவுளைக் கண்டு தம் துயர் நீங்க! நீ ஆலயம் செல்வது கடவுள் உனைக் கண்டு அவர் துயர் நீக்க!

அவளுக்கு நேரம் காட்டும் கடிகாரம் எப்போதும் P.M மட்டும் தான் காட்டுகிறதாம்! நிலா இரவில் தானே வரும்!

அவள் பிறந்த நாளை வானம் கொண்டாடுகிறது! மழை!

அவள் அங்கிருந்து வந்திருக்கலாம்! நீ எவ்வளவு அழுது கேட்டாலும் சரி என்னவளை தர மாட்டேன்! மழை!

இறைவன் வெறும் ஈக்கள் மட்டுந்தான் படைத்தான்! உன்னை மொய்த்தவை தேனீக்கள் ஆக மாறின!

நீரின்றி அமையாது உலகு! நீயின்றி அமையாது அழகு!

தொலைக்காட்சி தவறான செய்திகளையே தருகிறது! மலர் கண்காட்சி ஊட்டியிலாம்! அப்போது அவள் வீட்டில் இருப்பதை என்ன சொல்வீர்கள்!

பதில் தெரியா கேள்வி இது? அவள் நகர்வது மிதப்பதலா? நடப்பதாலா? சொல் அவளின் வெண் கொலுசே!

உனக்கு மாலையிட்ட போது பூக்கள் சொன்னது! “மூடனே பூந்தோட்டத்துக்கு மாலை இட்ட வேலை நீ மட்டும் செய்தாய் என்று”

அறிவில்லா இறைவா! அவளையும் படைத்து எனக்கு ஒரே ஒரு இதயத்தையும் படைத்தாயே! இரு கண்களால் காண்பதை எப்படி ஓர் இதயம் தாங்கும்!

அவள் வான் விட்டு நீங்கியதால் கண்ணீர் வடித்து உருவானதே கடல்!

உலக அழகி போட்டியை பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது எனக்கு!

அழகின் உச்சம் பேரழகி நீ அழகுத் தமிழ் பேசுவது!

4 comments:

  1. சான்ஸ்'லெஸ் டா... செம்ம... கலக்கலோ கலக்கல். நம்ம நடராஜா இது?

    ReplyDelete
  2. Super! I didn't think u can be this good at it.

    ReplyDelete

வாங்க பழகலாம்