Wednesday, August 24, 2011

கையெழுத்து


கையெழுத்து! இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது Handwriting, Signature, Autograph என்று மூன்று வார்த்தைகளுக்கு பொருளாய் நிற்கிறது. என்னே தமிழின் பெருமை!(?) முன்னது பின் வருபவற்றின் மதிப்பை நிர்ணயக்கின்றது என்ற அறிவுரை எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படும் அறிவுரைகளில் ஒன்று! பெரும்பாலும் எனக்கு அளிக்கப்பட்ட ஒரே அறிவுரையும் அதுதான்!

முதலாம் வகுப்பு படித்த போது இன்றும் ’செல்வராணி’ என்ற பெயர் கொண்ட ஆசிரியை அளித்த அந்த அறிவுரை இன்றும் நினைவிருக்கிறது! “கையெழுத்தை திருத்திரியா, உன் முட்டி எலும்பை திருப்பவா?” முதலாம் வகுப்பில் தொடங்கிய இந்த கொலை மிரட்டல் ஒவ்வொரு வகுப்பிலும் வெவ்வேறு பாணியில் வெவ்வேறு ஆசிரிய ஆசிரியைகளால் தொடர்ந்தது!

படிப்பை பொருத்த வரை சராசரிக்கும் சற்று மேல் என்பதால் என் கையெழுத்து திருந்தினால் நான் பளபளப்பேன் என்று எப்படித்தான் எல்லோருக்கும் தோன்றியதோ தெரியவில்லை! எல்லோரும் அதையே குத்தி குத்தி காட்டினார்கள்!

இவ்வளவு பேசுகிறாயே உன் கையெழுத்து என்ன அவ்வளவு மோசமா என்று கேட்கும் அன்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்! நான் எழுதியதை என்னால் எந்த கஷ்டமும் இன்றி படிக்க இயலுகிறது! வேறென்ன தேவை! இதை ஒரு முறை ஐந்தாம் வகுப்பில் வெளியிட்டதுக்கும் இரண்டு பிரம்படியுடன் ஒரு வகுப்பு முழுவதும் வெளியே நிற்க நேர்ந்தது.

ஆனால் இந்த Copy Writing எழுதும் போது மட்டும் என் கையெழுத்து சற்று ஒழுங்காக இருப்பதாக ரசிகைகள் (ஆசிரியைகள்) சொல்வதுண்டு! அதையே பரிட்சையிலும் வீட்டு பாடத்திலும் தொடர்ந்தால் என்ன கேட்டவர்களுக்கு சந்தானம் பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்!

எந்த பரிட்சையில் நாலு வரி நோட்டில் எழுத அனுமதி அளிக்கிறார்கள் அல்லது பத்து வரிகளுக்கு ஒரு மணிநேரம் அனுமதி தருகிறார்கள்! போங்காட்டம்! இதை சொன்னதுக்கும் ஒரு பாடவேளையில் வெளியே நிற்க நேர்ந்தது!

இப்போது தெரிந்திருக்குமே எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அறிவுரை என்னவென்று! வாயைக் குறை இல்லேனா உருப்பட மாட்ட!

எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல்வன் அர்ஜீன் போல் ஒரே வருடத்தில் எங்கள் பள்ளியை சீரமைத்த புது தலைமை ஆசிரியர் பதவி ஏற்றார் (இன்று வரை அவர்தான் த.ஆ)! யார்தான் சொல்லி தொலைத்தார்களோ தெரியவில்லை ஒரு பரிட்சையின் போது என் விடைத்தாளை வாங்கி பார்த்துவிட்டு பின்வரும் வரலாற்று சிறப்பு மிக்க உரையாடல் நடத்தினார்.
H.M: Do you know the significance of goat’s tail?

Me: (This is not a biology exam. Why is he talking about goat?!?): No sir

H.M: For the goat every organ will be completed and it has almost no defects except its tail. The goat tail for you is your handwriting. Try to change it

இப்படி சாதுவாகத்தான் தொடங்கினார், ஆனால் எனது தந்தைக்கும் தலைமை ஆசிரியருக்கும் உள்ள நட்பு இறுக்கமாக எனது கழுத்தை சுற்றி இருந்த கயிறும் இறுகியது! எனக்கு மட்டும் தனி Copywriting என பத்தாம் வகுப்பு வரை அவரது தீவரவாதம் தொடங்கியது!

பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் போது கூட என் புறங்கையையே முறைத்து பார்த்தார்! எவ்வளவு வாங்கி இருப்பேன்! ஒரு வழியாக பத்தாவது முடிந்து பதினொன்றாவது வணிகத்துறை எடுத்தாயிற்று!

வணிகம் படித்து வாரன் பபெட் ஆக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை! உயிரியல் செய்முறைத்தேர்வு அன்று உயிரியியல் பாட ஆசிரியை என் விடைத்தாளில் வரைபடம் வரைந்த போதே மிரட்டினார்! வரைந்தது அவராயிற்றே! +1 மட்டும் பயாலாஜி குரூப் எடுத்தே கொன்னுடுவேன்! பபொல்லோ! பபொல்லோ! ஆம்! இந்த ஆட்டின் இரண்டாவது வால் வரைபடம் (அந்த கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம்).

எல்லாம் புது ஆசிரியர்கள், ஆசிரியைகள்! ரெண்டு நாள் தான் பாடம் எடுத்தாங்க! மேலே கீழே பார்த்துவிட்டு நம்ம பள்ளியில் copy writing எழுதும் பழக்கம் உண்டா என்று என்னை குறி பார்த்து கேட்டார்கள்! பத்ம வியூகத்தில் நுழைந்த அபிமன்யுதான் நினைவுக்கு வந்தான்! 

இந்த நேரத்தில் தான் சத்திய சோதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காந்தியின் கையெழுத்தை பற்றி அவர் சொல்லியதை படித்தவுடன் spectrumத்தை முதலில் கண்ட ராஜா போல் எனக்கொரு மகிழ்ச்சி! அவ்வளவு பெரிய ஆளு காந்திக்கே இதான் நிலையாம் நாம் எந்த மூலைக்கு?? ஆனால் அவரும் அழகிய கையெழுத்தின் மகிமை பற்றி எழுதி, பொங்கி வந்த மகிழ்ச்சியை அடக்கினாலும் காந்திக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை என சிறு பெருமை இருந்தது (இருக்கிறது).

கல்லூரி வாழ்வில் எனக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருந்ததால் ஒரே ஒரு கொலை மிரட்டல் தான் வந்தது! முதல் வருடத்திலியே வந்தது! என் வரலாறை அவரிடம் எடுத்துக் கூறிய பின் ராபர்ட் புரூஸ் ஆக அந்த ஆசிரியர் தயாராகவில்லை! ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாது என்று அவரும் அறிவார் நானும் அறிவேன்!

எல்லாம் முடிந்து ஒரு கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தில் சேர்ந்தேன் நான் தயாரித்த முதல் Statementஐ பார்த்தவுடன் அவர் முகத்தில் மலிங்கா யார்க்கரை பார்த்தது போல் ஒரு முகபாவம்! அவர் தொடங்கினார் “நீ மட்டும் உன் கையெழுத்தை……..”.

Disclaimer: என் மோசமான கையெழுத்தால் நான் இழந்தது அதிகம் என்றாலும் எனக்கு கிடைத்தது இந்த பதிவைப் படித்து மகிழப்(!) போகும் அன்பர்களின் மகிழ்ச்சிதான்!

3 comments:

 1. super da...jus every scene runs in memory....missing those days:(

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க! நம்மைப் பற்றிய சிறிய குறையையும் நகைச்சுவை உணர்வோடு எழுதி படிப்போரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் :))
  amas32

  ReplyDelete
 3. Arunagiri MurugesanSeptember 4, 2011 at 6:27 PM

  Sooooppppperrrrrrr mama.... kalakkitta....

  உன்னிடமிருந்து இதுவரை வந்த பதிவுகளிலேயே இது தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது

  ReplyDelete

வாங்க பழகலாம்