சுமார் இரண்டடி
உயரம். சற்று செம்பட்டையான நிறம். மேலே கறுப்பு கோட்டிங் அடித்தது போல ஒரு வர்ணம்.
நான்கு கால்களிலும் ஐந்து நகங்கள் வீதம் மொத்தம் இருபது நகங்கள். பூசலும் இல்லாது பூஞ்சையும்
இல்லாது ஒரு மாதிரி சராசரி உடலமைப்பு. எப்பொழுதும் எதையோ தேடி தேடி அலுத்தது போன்ற
ஒரு வெறுமை அதன் கண்களில் குடிகொண்டிருக்கும். பொதுவாக மிருகங்களின் கண்களை பார்க்கக்கூடாது
என்பார்கள். குறிப்பாக மனிதனால் பழக்கப்படாத நாய்களின் கண்களை கூர்ந்து நோக்குவது அபாயம்.
அதனால் கண்களுக்கும் மேல் வர்ணனை அளிக்க சாத்தியமில்லாது போயிற்று.
அந்த தெருவில்தான்
அதை பார்ப்பது வழக்கம். அந்த தெரு சற்று விசாலாமானது இரு பேருந்துகள் ஒரே நேரத்தில்
அருகருகில் செல்லும் அளவுக்கு அகலமானது. அப்படி செல்லும் போது கூட சைக்கிள் செல்லும்
வகையில் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் ஆட்டோக்கள் செல்வது வாடிக்கை. இதை ஒரு
இயற்பியல் அதிசயம் என்று சொல்ல கேள்வி.
அப்படிபட்ட தெருவில்
தான் அது இருந்தது. இல்லை வசித்தது. ஏனெனில் அந்த தெருவை தவிர அதை வேறெங்கும் பார்த்ததில்லை.
அந்த தெருவின் நடுசென்டரில் இருக்கும் சிகப்பு வண்ணம் பூசிய வீட்டின் மூலையில் உள்ள
குப்பைத்தொட்டியை கடக்கும் போது தான் அதை பெரும்பாலும் பார்ப்பேன்.
எப்பொழுது அதை
கடந்தாலும் குப்பையில் உணவு தேடுவதை விட்டு நிமிர்ந்து என்னை பார்க்கும். நான் அதை
ஒரு நொடி பார்ப்பேன். பின் பாராதது போல் தலையை திருப்பி கொள்வேன். ஆனால் அது என்னையே
தீர்க்கமாக பார்த்து கொண்டிருக்கும். ஏனென்று தெரியவில்லை. என்னுடைய முகம் அதை கல்லால்
அடித்த அந்த சிறுவனை ஒத்திருந்திருக்கலாம், மோட்டர் சைக்கிளை அதன் மேல் உரசுவது போல்
சென்று ஹாரன் அடித்த அந்த மனிதர் போட்டிருந்த அதே பிராண்ட் வாசனை திரவியத்தை நானும்
போட்டு கொண்டிருக்கலாம்.
ஏன் அப்படி நினைக்க
வேண்டும்? ஒரு வேளை தன் பிஸ்கட்டில் சிறிது தந்த சிறுவனின் முகத்தை கூட என் முகம் ஒத்திருக்கலாம்.
அல்லது என்றோ டீக்கடையில் பன் வாங்கி போட்ட அந்த மனிதர் பயன்படுத்திய வாசனை திரவியத்தை
நானும் போட்டிருக்கலாம். நல்லது நினைப்பதே நல்லது நடக்க வழிவகுக்கும்.
நாய் யார் கடந்து
சென்றாலும் பார்க்கத் தானே செய்யும் என்று மூளை ஒரு தர்க்கத்தை முன் வைத்தது. ஆனால்
எனக்கு முன் கடந்து செல்பவரை சுத்தமாக சட்டை செய்யவே செய்யாது. மக்கள் குறை கண்டுகொள்ளா
ஆட்சியாளர்கள் போல அமைதியாகவே இருக்கும். நான் கடக்கும் போது மறுபடி பார்க்கும். அதே
தீர்க்கமான பார்வை. நான் கடந்து சென்றவுடன் தன் வேலையை பார்க்க தொடங்கும்.
இவ்வாறே பேருந்தில்
காணும் இளம் யுவதி கண்ணாளும் பார்த்தும் பார்க்காத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதை பார்த்தபடியே அந்த
தெருவை கடப்பது வழக்கம்.
அன்றும் அப்படி
கடக்க எத்தனிக்கையில் தெருவின் நுழைவிலேயே இருக்கும் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் அருகேயே
அது நின்றிருந்தது. ஏனோ முகத்தில் கோபம். மூச்சிரைப்பு வேறு பலமாய் இருந்தது. தெருவின்
நுழைவையே கண்களில் கோப அணுசக்தி தெறிக்க பார்த்து கொண்டிருந்தது. பொதுவாக அந்த குப்பைத்தொட்டியை
தவிர அதை எங்குமே கண்டதில்லை.
இப்போது இந்த இடமாறுதலே
எனக்கு லேசாக கிலியூட்டியது. ஒரு வேளை அந்த கல்லால் அடித்த சிறுவன், பைக்கால் உரசிய
மனிதர் யாரோ சமீபத்தில் கடந்து போயிருப்பார்களோ? அவர்களை துரத்தி கொண்டுதான் அங்கு
வந்து நின்றிருக்குமோ? அவனின் முகம் என்னுடையது போலவே இருக்குமோ? அதே வாசனை திரவியத்தை
தான் நானும் பயன்படுத்துகிறேனோ? இப்போது இதை கடப்பது புத்திசாலிதனம் தானா?
ஒரு நாயின் தாக்குதலை
சமாளிக்கும் அளவுக்கு என்னுடைய உடல் வலிமை வாய்ந்தது தான். கேவலம் இரண்டடி உயரம். நானோ
கிட்டதட்ட ஆறடி. பாய்ந்து வரும் போது ரேம்போ படத்தில் ஸ்டலோன் அடிப்பது போல அடித்து
விட முடியும். ஆனால் அவர் அடிப்பதை கூட திரையில் காட்ட மாட்டார்கள். அதனால் எந்த இடத்தில்
அடித்தால் ஒரே அடியில் விழும் என்று தெரியாது.
ஓடுவதற்கு சாத்தியம்
இருக்கிறது. என்னால் வேகமாக ஓட முடியும் என்ற ஒரு சாத்தியம் தோன்றியது. ஆனால் நாயின்
வேகம் என்னை விட அதிக வேகமாக இருந்தால் என்ன செய்வது? இப்படி ஒரு சின்ன SWOT ஆராய்ச்சி
செய்து பார்த்தேன். எப்படி பார்த்தாலும் நாய் வென்றுவிடும் என்றே என் மூளை எச்சரித்தது.
மறுபடியும் அதை
பார்த்தேன். அதே கோபம். அதே பார்வை. அதே முன் வரிசை பற்கள்.
இந்த தெரு இல்லாது
போனால் இன்னும் ஒரு கிலோமீட்டர் சுற்றி நடக்க வேண்டும். அவ்வளவு தானே? திரும்பி நடக்க
தொடங்கினேன்.
அடுத்த நாள். மீண்டும்
அந்த தெருவை கடக்கும் நேரமும் வந்தது.
டிரான்ஸ்ஃபார்மர்
அருகே அந்த நாய் இல்லை. வெள்ளை வண்ணம் பூசிய அந்த வீட்டின் திண்ணையிலும் இல்லை. குப்பைத்
தொட்டியிலும் இல்லை. எங்குமே இல்லை. ஒரு வேளை என் வருகைக்காக எங்கோ மறைந்து காத்திருக்கறதோ,
கொரில்லா தாக்குதல் எல்லாம் கற்றிருக்குமோ என்ற பயம் முளைவிட்டது. ஆனால் தெருவை கடக்கும்
வரை எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.
இப்போதெல்லாம்
தினம் அந்த தெருவை கடந்து கொண்டேதான் இருக்கிறேன். அந்த நாயை மறுபடியும் பார்க்கவே
இல்லை. அதன் கோபத்தின் காரணமும், என்னை மட்டும் பார்க்கும் அந்த பார்வையின் அர்த்தமும்
எனக்கு தெரியப்போவதே இல்லை.