Wednesday, August 24, 2011

கையெழுத்து


கையெழுத்து! இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது Handwriting, Signature, Autograph என்று மூன்று வார்த்தைகளுக்கு பொருளாய் நிற்கிறது. என்னே தமிழின் பெருமை!(?) முன்னது பின் வருபவற்றின் மதிப்பை நிர்ணயக்கின்றது என்ற அறிவுரை எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படும் அறிவுரைகளில் ஒன்று! பெரும்பாலும் எனக்கு அளிக்கப்பட்ட ஒரே அறிவுரையும் அதுதான்!

முதலாம் வகுப்பு படித்த போது இன்றும் ’செல்வராணி’ என்ற பெயர் கொண்ட ஆசிரியை அளித்த அந்த அறிவுரை இன்றும் நினைவிருக்கிறது! “கையெழுத்தை திருத்திரியா, உன் முட்டி எலும்பை திருப்பவா?” முதலாம் வகுப்பில் தொடங்கிய இந்த கொலை மிரட்டல் ஒவ்வொரு வகுப்பிலும் வெவ்வேறு பாணியில் வெவ்வேறு ஆசிரிய ஆசிரியைகளால் தொடர்ந்தது!

படிப்பை பொருத்த வரை சராசரிக்கும் சற்று மேல் என்பதால் என் கையெழுத்து திருந்தினால் நான் பளபளப்பேன் என்று எப்படித்தான் எல்லோருக்கும் தோன்றியதோ தெரியவில்லை! எல்லோரும் அதையே குத்தி குத்தி காட்டினார்கள்!

இவ்வளவு பேசுகிறாயே உன் கையெழுத்து என்ன அவ்வளவு மோசமா என்று கேட்கும் அன்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்! நான் எழுதியதை என்னால் எந்த கஷ்டமும் இன்றி படிக்க இயலுகிறது! வேறென்ன தேவை! இதை ஒரு முறை ஐந்தாம் வகுப்பில் வெளியிட்டதுக்கும் இரண்டு பிரம்படியுடன் ஒரு வகுப்பு முழுவதும் வெளியே நிற்க நேர்ந்தது.

ஆனால் இந்த Copy Writing எழுதும் போது மட்டும் என் கையெழுத்து சற்று ஒழுங்காக இருப்பதாக ரசிகைகள் (ஆசிரியைகள்) சொல்வதுண்டு! அதையே பரிட்சையிலும் வீட்டு பாடத்திலும் தொடர்ந்தால் என்ன கேட்டவர்களுக்கு சந்தானம் பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்!

எந்த பரிட்சையில் நாலு வரி நோட்டில் எழுத அனுமதி அளிக்கிறார்கள் அல்லது பத்து வரிகளுக்கு ஒரு மணிநேரம் அனுமதி தருகிறார்கள்! போங்காட்டம்! இதை சொன்னதுக்கும் ஒரு பாடவேளையில் வெளியே நிற்க நேர்ந்தது!

இப்போது தெரிந்திருக்குமே எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அறிவுரை என்னவென்று! வாயைக் குறை இல்லேனா உருப்பட மாட்ட!

எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல்வன் அர்ஜீன் போல் ஒரே வருடத்தில் எங்கள் பள்ளியை சீரமைத்த புது தலைமை ஆசிரியர் பதவி ஏற்றார் (இன்று வரை அவர்தான் த.ஆ)! யார்தான் சொல்லி தொலைத்தார்களோ தெரியவில்லை ஒரு பரிட்சையின் போது என் விடைத்தாளை வாங்கி பார்த்துவிட்டு பின்வரும் வரலாற்று சிறப்பு மிக்க உரையாடல் நடத்தினார்.
H.M: Do you know the significance of goat’s tail?

Me: (This is not a biology exam. Why is he talking about goat?!?): No sir

H.M: For the goat every organ will be completed and it has almost no defects except its tail. The goat tail for you is your handwriting. Try to change it

இப்படி சாதுவாகத்தான் தொடங்கினார், ஆனால் எனது தந்தைக்கும் தலைமை ஆசிரியருக்கும் உள்ள நட்பு இறுக்கமாக எனது கழுத்தை சுற்றி இருந்த கயிறும் இறுகியது! எனக்கு மட்டும் தனி Copywriting என பத்தாம் வகுப்பு வரை அவரது தீவரவாதம் தொடங்கியது!

பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் போது கூட என் புறங்கையையே முறைத்து பார்த்தார்! எவ்வளவு வாங்கி இருப்பேன்! ஒரு வழியாக பத்தாவது முடிந்து பதினொன்றாவது வணிகத்துறை எடுத்தாயிற்று!

வணிகம் படித்து வாரன் பபெட் ஆக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை! உயிரியல் செய்முறைத்தேர்வு அன்று உயிரியியல் பாட ஆசிரியை என் விடைத்தாளில் வரைபடம் வரைந்த போதே மிரட்டினார்! வரைந்தது அவராயிற்றே! +1 மட்டும் பயாலாஜி குரூப் எடுத்தே கொன்னுடுவேன்! பபொல்லோ! பபொல்லோ! ஆம்! இந்த ஆட்டின் இரண்டாவது வால் வரைபடம் (அந்த கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம்).

எல்லாம் புது ஆசிரியர்கள், ஆசிரியைகள்! ரெண்டு நாள் தான் பாடம் எடுத்தாங்க! மேலே கீழே பார்த்துவிட்டு நம்ம பள்ளியில் copy writing எழுதும் பழக்கம் உண்டா என்று என்னை குறி பார்த்து கேட்டார்கள்! பத்ம வியூகத்தில் நுழைந்த அபிமன்யுதான் நினைவுக்கு வந்தான்! 

இந்த நேரத்தில் தான் சத்திய சோதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காந்தியின் கையெழுத்தை பற்றி அவர் சொல்லியதை படித்தவுடன் spectrumத்தை முதலில் கண்ட ராஜா போல் எனக்கொரு மகிழ்ச்சி! அவ்வளவு பெரிய ஆளு காந்திக்கே இதான் நிலையாம் நாம் எந்த மூலைக்கு?? ஆனால் அவரும் அழகிய கையெழுத்தின் மகிமை பற்றி எழுதி, பொங்கி வந்த மகிழ்ச்சியை அடக்கினாலும் காந்திக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை என சிறு பெருமை இருந்தது (இருக்கிறது).

கல்லூரி வாழ்வில் எனக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருந்ததால் ஒரே ஒரு கொலை மிரட்டல் தான் வந்தது! முதல் வருடத்திலியே வந்தது! என் வரலாறை அவரிடம் எடுத்துக் கூறிய பின் ராபர்ட் புரூஸ் ஆக அந்த ஆசிரியர் தயாராகவில்லை! ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாது என்று அவரும் அறிவார் நானும் அறிவேன்!

எல்லாம் முடிந்து ஒரு கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தில் சேர்ந்தேன் நான் தயாரித்த முதல் Statementஐ பார்த்தவுடன் அவர் முகத்தில் மலிங்கா யார்க்கரை பார்த்தது போல் ஒரு முகபாவம்! அவர் தொடங்கினார் “நீ மட்டும் உன் கையெழுத்தை……..”.

Disclaimer: என் மோசமான கையெழுத்தால் நான் இழந்தது அதிகம் என்றாலும் எனக்கு கிடைத்தது இந்த பதிவைப் படித்து மகிழப்(!) போகும் அன்பர்களின் மகிழ்ச்சிதான்!

Wednesday, August 3, 2011

தெனாலிராமனும், பவர்கட்டும்

தெய்வத்திருமகள்

மகாராணி விஜயலதா: என்ன குடிமக்களே! முந்தைய கொடுங்கோல் ஆட்சியில் உங்களுக்கு மின்சாரம் தராமல் உள்ளையும், புறத்தையும் சுட்டெரித்த சூரிய குடும்பத்து ஆட்சியை நீக்கி பசுமையைப் பரப்பி வரும் என் ஆட்சியில், எனது ஆணைப்படி இயங்கும் துறையான மின்சாரத் துறை சிறப்பான முறையில் இயங்கி என் குடிகளை குளிர்வித்து கொண்டிருக்கிறது! இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் குடிகளே?!?!?!

மா: வளசரவாக்கத்தில் கடந்த 2 வாரங்களாக பிடுங்கவில்லை! மயிலாடுதுறையில் 3 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாகி விட்டது. மிகச்சிறப்பு. குடிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

பா: ஒரு மணி நேரம் நான் வசிக்கும் பகுதியில் மின்சாரத் தடை முன்னும் உண்டு இப்போதும் உண்டு! குடிகள் மகிழ்ச்சியாகவும் இல்லை, மகிழ்ச்சி இல்லாமலும் இல்லை.

அன்று மாலை ’வி’ தொலைக்காட்சியில் “மக்களின் மகிழ்ச்சி பெருகும் பொன்னாட்சியின் மற்றொரு உதாரணம் இதோ”

முற்றும்.


I AM SAM

கிருஷ்ணதேவராயரால் சிறிது காலம் நகர்வலம் சென்று நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள இயலவில்லை. அதனால் அரண்மனைகளுக்கு வரும் சாதரண மனிதர்களுடன் பேசும் போது அவ்வப்போது நாட்டின் நிலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அன்று அரசருக்கு சிகையலங்காரம் செய்ய நாவிதர் வந்திருந்தார். கூட தெனாலிராமனும் இருந்தார்.

கி.தே.ரா: என்ன நாவிதரே! நாட்டில் மக்கள் எல்லாம் நலமா! குடிகள் ஆட்சியைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

நாவிதர்: அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள் மன்னா! தங்களது நல்லாட்சியால் அனைத்து குடிகளின் கைப்பையிலும் ஒரு சவரன் தங்கம் இருக்கிறது! அவ்வளவு சுபிட்சம்!

அப்போது தெனாலிராமன் நாவிதனின் பையில் இருக்கும் தங்கத்தை பார்க்கிறான்!

நாவிதன் சென்ற பின்

கி.தே.ரா: பார்த்தாயா ராமா! எனது ஆட்சியில் அனைவரிடமும் தங்கம் இருக்கிறது!


 தெ.ரா: ஆம் மன்னா! தாங்கள் கூறியது சரிதான்!

அடுத்த வாரம் நாவிதர் அரண்மனைக்கு வரும் ஒரு நாள் முன்பு தெனாலி நாவிதனிடம் இருந்து அந்த தங்கத்தை திருடிவிடுகிறான்.


கி.தே.ரா: என்ன நாவிதரே! நாட்டில் மக்கள் எல்லாம் நலமா! குடிகள் ஆட்சியைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?


நாவிதர்: அனைவரும் துன்பத்தில் உள்ளார்கள் மன்னா! நாட்டில் களவும் கொள்ளையும் பெருகிவிட்டது! ஒரு சவரன் தங்கத்தைக் கூட கைப்பையில் வைத்திருக்க இயலவில்லை!

நாவிதன் சென்ற பின்


கி.தே.ரா: என்ன ராமா இது?!?! எனது ஆட்சியில் திருட்டா? காலம் மிகவும் கெட்டுவிட்டது


தெ.ரா (புன்னகையுடன்) : ஆம் மன்னா! தாங்கள் கூறியது சரிதான்!


கிருஷ்ண தேவ ராயருக்கு புரிந்தது!


ஆனால் இன்று இருக்கும் நவீன அரசர்கள் வெறும் முதல் பாதியை மட்டும் விளம்பரம் இட்டு பொய்த் தோற்றம் உருவாக்கி தங்கள் தொலைக்காட்சியில் விளம்பரமும் செய்துவிடுகிறார்கள். நவீன தெனாலிராமன் தான் இன்று நமக்கு தேவை.