என் கண்முன்னே ஒரு குண்டூசி இருக்கிறது.
அதன் அருகில் பேப்பரா, அட்டையா
என்று பகுத்தறியா முடியாத பருமனுடன் ஒரு
காகிதம் இருக்கிறது. அது நீள் சதுரம்
என்ற வடிவமைப்பில் அடங்கும். அந்த நீள்சதுர அட்டை
காகிதத்தின் மீது சில வண்ணங்கள்
இருக்கின்றன. அதில் சில வண்ணங்கள்
நீள்சதுர வடிவிலேயே பூசப்பட்டுள்ளன. இந்த வண்ணக் காகித
அட்டையை காணும் வண்ணத்தின் அடியே
காகித அட்டை உள்ளதா அல்லது
காகித அட்டையின் மீது வண்ணம் அமர்ந்துள்ளதா
என்று சிந்திக்க தோன்றுகிறது.
இந்த நீள் சதுரம் சம
அளவில் மூன்று நீள்சதுர அளவில்
பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஆரஞ்சா,
சிகப்பா என்று அறுதியிட்டு கூற
முடியாத ஒரு வண்ணம்.இதை
காவி என்று அழைப்பது உலக
வழக்கம். அதனால் நானும் இதை
காவி என்றே அழைத்து கொள்கிறேன்.
இந்த காவி வண்ணம் இங்கு தியாகத்தை
குறிக்கிறது.
காவி நிறத்தின் கீழே அதே அளவில்
வெள்ளை வண்ணம் இருக்கிறது. இதில்
வெள்ளை பூசப்பட்டுள்ளது என்று எழுதாத காரணம்
என்னவென்றால் இந்த காகித அட்டை
பிறக்கும் போதே வெள்ளை நிறத்தில்
இருந்திருந்தால் நிச்சயம் வெள்ளை வண்ணம் பூசி
வெள்ளை நிற மையை வீணடிக்கமாட்டார்கள்
என்று நம்பியதால் தான். இந்த நிறம்
சமாதானத்தை குறிக்கிறது. இதை இம்சை அரசன்
23ஆம் புலிகேசி படத்திலேயே பார்த்திருப்பீர்கள். அதன் நட்டநடுவில் ஒரு
வட்டம் வரையப்பட்டிருக்கிறது. அது மேல் உள்ள
காவி நிறத்தை தொட்டும், கீழ்
இருக்கும் ------ நிறத்தை தொட்டும் வரையப்பட்டுள்ளது.
அந்த வட்டத்தின் நடுவே
(
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
எண்ணி முடித்துவிட்டேன்) 24 கோடுகள் வரையப்பட்டுள்ளன. அவையெல்லாம்
வட்டத்தின் நடுவில் சேருவதை போல்
அமைக்கப்பட்டு இருக்கிறது. இது தர்ம சக்கரம்
என்றும் 24 மணிநேரமும் தேச சிந்தனைக்கு பாடுபடுவதை
குறிப்பதாக கூறுவர்.
மேலே இருக்கும் பத்தியில் "கீழ் இருக்கும் ------ நிறத்தை"
என்றொரு வரியை நீங்கள் படித்து
வந்திருக்கக் கூடும். இப்போது அந்த
சிறிய வெற்றிடத்தில் பச்சை என்று நிரப்பி
படித்துவிட்டு வாருங்கள். செல்வதற்கு முன் ஒரு குறிப்பு.
மீண்டும் வட்டத்தில் இருக்கும் கோடுகளை எண்ண வேண்டாம்.
எத்துணை முறை எண்ணினாலும் 24 கோடுகள்
தான் இருக்கும்.
பச்சை பல வகைப்பட்டாலும் இந்த
பச்சை அடர்பச்சை. இது இந்திய திருநாட்டின்
வளத்தை குறிப்பதாக கூறுவர். ஆம் நான் வசிக்கும்
இந்திய நாட்டில் வளங்கள் மிக அதிகம்
. அதனால் தான் வைக்க இடமில்லாமல்
சுவிஸ் வங்கிகளில் யாருக்கும் தெரியாமல் கள்வர்கள் களவாட இடமளிக்காது பத்திரப்படுத்தியுள்ளோம்.
இந்த வளம் வருங்கால தலைமுறைக்கு
உதவும்.
இப்போது
குண்டூசியை எடுத்து கொடியில் லாவகமாக
படுக்கவைக்கப்பட்ட நேர்கோட்டில் இரு துளைகள் இட்டு
அதை அட்டை காகிதத்துடன் இணைத்துவிட்டேன்.
அதில் ஒரு துளையானது தியாகத்தை
குறிக்கும் காவியிலும், மற்றொன்ரு சமாதானத்தை குறிக்கும் வெள்ளையிலும் இடப்பட்டுள்ளது. நீள்சதுரத்தில் இவ்வாறு துளையிட்டால் அது
நேர்கோடாகாது என்பவர்கள் நிச்சயம் ஜியாமெட்ரியில் 10/10 வாங்கியவர்களாக இருப்பீர்கள் என அறிகிறேன். இது
எனக்கு புரியாமல் போனாதால் தான் கணக்கு பரிட்சை
தாளை எனது தாயிடம் காட்டியபோது
என் தலையீன் மீது என்
தாயின் அன்னப்பறவை படம் போட்ட மோதிரம்
உராசியது.
இப்போது
நீள்சதுர காகித அட்டையும், குண்டூசியும்
ஜோடி சேர்ந்துவிட்டது. அடுத்து இதை என்
வெள்ளையில் கறுப்பு கோடிட்ட சட்டைக்கு
இடது புறத்தில் உள்ள பாக்கெட்டின் மேல்
இருக்கும் நீள் சதுர பகுதியில்
சேர்க்க வேண்டும். என் சட்டையிலும் அதே
நேர்க்கோட்டில் இருதுளைகள் இட்டு சட்டையில் பதித்து
விட்டேன்.
முடிவில் தியாகத்திலும்
சமாதானத்திலும் துளையிட்டு என் சொத்தான சட்டையிலும் துளையிட்ட பின் இந்தியாவின் வளம்
எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாகவே உள்ளது.
அனைவருக்கும்
சுதந்தரதின நல்வாழ்த்துகள்.