Friday, February 3, 2012

பட்டாம்பூச்சி


Ecosystem பற்றி படித்து கொண்டிருந்தான் ராம். இந்த உலகத்தில் இயற்கை உருவாக்கிய அமைப்பில் மனிதர்கள் எவ்வாறு குறுக்கிடுகிறார்கள் என்ற பகுதியை படிக்க தொடங்கிய போது அந்த குரல் அவன் கவனத்தை திசைதிருப்பியது.

”அப்பா! அங்க பாருப்பா அந்த செடியில பட்டர்ப்ளை ஒட்டிகிச்சு” என்றாள் காவியா.

அந்த பிய்ந்து போன பூவில் சில அசைவுகள் தெரிந்து கொண்டே இருந்தன! ராம் தன் உயிரியல் சோதனைக்காக வளர்க்கும் செடி அது! கொலைகாரச் செடி! மனிதனின் வன்மத்தை படைக்க ஆண்டவன் ஒரு சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது உருவான ஒரு வெற்றிகரமான படைப்பு. கொன்று தின்ன விலங்குகளை இதை மாடலாக வைத்தே அந்த இறைவன் அதை படைத்திருக்க வேண்டும்.

ராமிற்கு எல்லாம் புரிந்தே இருந்தது.

”அது ஒன்னும் இல்லம்மா! அந்த பட்டாம்பூச்சி அந்த செடியிடம் மாட்டிக்குச்சு. அந்த செடி அதை முழுங்கிடும்.”

காவியா முகத்தில் இருந்த வண்ணங்கள் கருக்க தொடங்கின. அதைக் கண்ட ராமிற்கு அந்த பட்டாம்பூச்சியின் முகம் கருப்பதாகவே தோன்றியது.
.
“அப்படினா! அந்த பட்டாம்பூச்சி காணா போயிடுமாப்பா?” காவியாவின் குரலும் சோர்வடைய தொடங்கியது.

காவியாவுக்கு Ecosystem பற்றி விளக்க வேண்டிய நேரம் வந்து விட்டதோ என உணர்ந்த போது, அவள் ராமின் BugNetஐ எடுத்து கொண்டு செடியை நோக்கி ஓடினாள்.

Nepenthes khasiana தனது மதிய உணவு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட தொடங்கியது. அதன் உணவை எந்த பாவமும் அறியாத ஒரு மழலை தடுக்கப் போகிறது என அதற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
காவியாவின் பின் ஓட்டமும் நடையுமாக வந்த ராம் அந்த காட்சியைக் கண்டு வியந்து தான் போயிருந்தான். காவியா இப்போது அந்த செடியை பிய்த்து எறிந்திருந்தாள். பிட்சரை பிய்த்து பட்டாம் பூச்சியை விடுவிக்கும் முயற்சியில் பாதி வெற்றியும் பெற்றிருந்தாள்.

ராமிற்கு செடி போனதன் கோபம் ஒருபுறம் இருந்தாலும் அந்த மழலையின் வஞ்சமற்ற முயற்சியும், வலை விரித்து ஒரு உயிரைக் கொல்லும் அந்த செடியின் மீதிருந்த ஆத்திரமும் அவனை சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில் ஆழ்த்தியது.

.ஒரு வழியாக பட்டாம்பூச்சியை முக்கால்வாசி பிரித்து எடுத்து விட்டாள். எப்படி பிடிப்பது என அறியாமல் தன் ஐந்து விரல்களையும் சோறு அள்ள எடுப்பது போல கொண்டு சென்றாள். இப்போது காவியாவிடமிருந்து விடுபட்டு காற்றில் கலந்திருந்த படபடப்பு ராமின் மீது தொற்றி கொண்டது.

ஒரே தாவலாக தாவி அவள் கையைத் தடுத்து “அதை அப்படி பிடிக்கக் கூடாதுமா, இப்படி இரண்டு விரல்களை வைத்து இந்த மஞ்சள் பார்ட்டை மெல்லமா அழுத்தம் கொடுக்காம பிடித்து எடுக்கனும்.” என்று அவள் கையை வைத்தே அந்த சிறிய மஞ்சள் விமானத்தை வெளியே எடுத்தான்.


காவியாவின் முகத்தில் இருந்த வார்த்தையை மகிழ்ச்சி என ஒரே சொல்லில் அடக்கினாலும் அவள் முகத்தில் தவழ்ந்த அந்த புன்னகையில் அழகைத்தாண்டி வேறு ஏதோ ஒன்றை அவன் கண்டான். இதைத் தான் சொல்வார்களோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று?

”அச்சோ! அப்பா” என்ற இசை ராமின் எண்ணங்களை கலைத்தது. “என்னப்பா பிடிக்கிற இங்க பாரு பறந்துடுச்சு! கொஞ்ச நேரம் கூட கையில வைச்சுக்க முடியல” என்றபடி கையில் வலையை எடுத்து கொண்டு பட்டாம்பூச்சியை நோக்கி மிதந்து சென்றாள்.

மறுபடியும் வந்து கணிப்பொறியின் முன் அமர்ந்த போது இயற்கையின் அமைப்பில் மனிதர் எப்படி குறுக்கிடுகிறார்கள் என்ற பகுதி திறந்தே இருந்தது.