உலக உயிர்களின் பரிமாண வளர்ச்சியின் உச்சாணியை மனித இனம்
அடையும் முயற்சியில் சில விலங்கினத்தின் வாழ்வியல் நெறிகளையும் மாற்ற நேர்ந்தது. விலங்குகளுக்கு
ஏது வாழ்வு நெறி என வியப்பவர்களுக்கு வாழ்வு நெறிகளை உருவாக்கிய மனிதனே ஒரு விலங்குதான்
என்பதை நினைவு படுத்த விழைகிறேன்.
உலகில் உள்ள எந்த பசுவும் மற்ற உயிரைக் கொன்று உண்ணாது!
உலகில் உள்ள எந்த சிங்கமும் புலால் உணவை தவிர்க்காது! படைக்கப் பட்ட போது அவைக் கொண்ட
நெறிகள் காலம் மாறினாலும் இன்னும் அப்படியேத்தான் உள்ளன. ஆனால் மனிதனுக்கு காலம் மாற
மாற பரிமாண வளர்ச்சி என்ற பெயரில் தம் வாழ்வியல் நெறிகளை மாற்றிக்கொண்டே தான் இருக்கிறான்.
இவ்வாறு நெறிகளில் மனிதனால் மாசுபட்டவை தான் நாய்கள்.
ஒரு மனிதனை நாம் இகழ அதிகம் உபயோகிக்கும் இந்த சொல் இகழ் சொல்லாக எதனால் உருமாறியது
என்று இன்று வரை தெரியவில்லை. ஏன் யாருமே பூனை, நரி என்று மற்றவரை இகழ்வதில்லை இவை
அப்படியே நாய்களைப் போலத் தானே?
நாய்களின் வாழ்வு முறை பெரும்பாலும் நரிகளை போன்றுதான்
இருந்திருக்க வேண்டும். ஆயின் உணவு கிடைக்கும் எளிதான தன்மையால் அவை மனித இனத்தோடு
சேர்ந்து தன் இனத்தையே மற்றொரு இனத்துக்காக கொல்லும் மனித புத்தியை அடைந்ததால் நாய்கள்
வேட்டை மனிதனின் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்துவிட்டன.
உலகின் முதல் கூலிப்படையான வேட்டை நாய்கள் உருவாகிய பின்
தான், தன் தேவைக்காக ஒரு உயிரின் உதவி கொண்டு ஒரு உயிரை பறிக்கலாம் என்ற எண்ணம் உதித்திருக்க
வேண்டும். இப்படி மனித இனத்திலும் தனது முத்திரையை பதித்த நாய்கள் நம் வாழ்வின் ஒரு
பகுதியாக ஒன்றிவிட்டன.
தொடர்ந்து ஜெயிக்கும் இந்திய கிரிக்கெட் அணி எப்படி சாத்தியம்
இல்லையோ அதே போல தெருநாய்கள் இல்லாத இந்தியாவும் சாத்தியமல்ல. இந்தியாவின் வாஸ்துப்படி
ஜனத்தொகையோடு நாய்தொகையும் சேர்ந்தே வளர்ந்தது. தெருவுக்கு ஒரு அல்லது ஒன்றுக்கும்
மேற்பட்ட செல்ல நாய்கள் சுகாதாரத்துக்கு பெயர் போன இந்திய தெருக்களில் பெருகத் தொடங்கின.
மனித உயிரைப் பற்றி பெரிதும் வருந்தாத அரசியல்வாதிகள்
ஆளும் நாடு நாய்களைப் பற்றியா கவலைப்படப் போகின்றது? அதனால் இந்தியாவின் இரவுத் தெருக்களைப்
பதிவு செய்யும் போது ஒளியாக மங்கிய தெருவிளக்கும், ஒலியாக தெருநாயின் ஊளையும்தான் பதிவு
செய்யப்படுகிறது.
நமது தேசிய பொருளாதாராம் கருப்பே என்றாலும் நமது தேசிய
நிறம் பழுப்பாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் பழுப்பு
நிறமாகத்தான் இருக்கின்றனர் இந்திய நாய்களும் கூட. என்னதான் இறைவன் இலட்சம் நிறங்களையும்,
மனிதன் கோடி நிறங்களையும் படைத்தாலும் நாய்கள் பெரும்பாலும் கருப்பு, வெள்ளை, பழுப்புதான்.
மனிதனுக்கும் நாய்க்கும் ஒரு பொதுவான குணாதிசியம் உண்டு.
பெரும்பாலும் இருவரும் தம் சூழ்நிலைகளை கணக்கு செய்த பின் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
மனிதன் எப்படி பகலில் அலுவலகத்தில் மேலாளரிடம் வாலாட்டி இரவு வீட்டுக்கு வந்த பின்
மனைவியடம் குலைக்கிறானோ நாய்களும் காலை உரசிச் சென்ற இரு சக்கர வாகனத்திடம் பதுங்கி
இரவு அவற்றை தொந்திரவு செய்யாமல் போபவரையும் குலைக்கும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி முதல் நாய் பிடிக்கும் வண்டிகள்
முன்னர் இருந்தாலும் யாரேனும் காயப்படும் வரை இந்திய அரசின் நிர்வாகம் போலவே துருப்பிடித்து
இருக்கும். நகராட்சி அலுவலகங்களில் சில மனுக்கள், மாமன்ற உறுப்பினரிடம் சில பொருமல்கள்,
பொதுமக்களின் சாலை மறியல், மருத்துவமனைகளின் வெறிநாய்க்கடிகளின் எண்ணிக்கை இவற்றை பொருத்து
அவற்றின் பயன்பாடு பெருகும்.
அப்படியாவது அவற்றின் எண்ணிக்கை குறைந்ததா என்றால் அதுவும்
இல்லை. தெருநாய்களை எண்ணிக்கையை ஏன் குறைக்க வேண்டும் அவையும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு
போகட்டுமே என்பவர்களுக்கு ஒரு பந்தயம். அதில் நீங்கள் வென்று வந்து விட்டால் தெருநாய்களுக்கு
குரல் கொடுக்கவும்.
பந்தயத்தின் விதிமுறைகள் பின் வருமாறு. இரு கைகளிலும்
ஐந்து கிலோ எடையுள்ள பைகளை வைத்துக் கொண்டு அதிகாலை மூன்று மணிக்கு மந்தவெளி பொது மைதானத்திலிருந்து
BSNL அலுவலகம் வரை இரு நாய்களிடம் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவே.
உண்மையாகவே முயற்சி செய்ய விழைபவர்களுக்கு தயவு செய்து ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொள்ளவும்.
ஏனெனில் சிறு கீறல்களை எளிதாக தவிர்க்கலாம்.
எச்சரிக்கை! சில சமயம் அவை இரண்டும் பற்களை உபயோகப்படுத்தக்கூடும்.
அப்போது இரு கைகளில் உள்ள பைகளை லாவகமாக சுழற்றி அவை மேல் படாமல் பயமுறுத்த வேண்டும்.
மேலே பட்டால் ஓட்டபந்தயத்தின் எல்லை நீளக் கூடும். அவ்வப்போது ச்சூ ச்சூ என சத்தமிட்டாலும்
ஓட்டத்தின் வேகம் குறையக்கூடாது அவற்றை கண்களின் பார்க்க கூடாது. அனுபவத்தால் சொல்கிறேன்.
இவ்வாறு பல ஊர்களில் ஓட்டப்பந்தயத்துக்கு பயிற்சி எடுக்க
பல இடங்கள் உள்ளன. தூரமும் நாய்களின் எண்ணிக்கையும் கொஞ்சம்(!) மாறுபடும். ஆனால் அதே
நாய்கள் நீங்கள் பகலில் எட்டி உதைத்து சென்றாலும் கம்மென்று வாலை சுருட்டிக்கொண்டு
ஓடி விடும். ஏனெனில் பகலில் வீரத்தைக் காட்டினால் வாழ்வாதாரமான ஆட்சி எல்லைக்கு உட்பட்ட
குப்பைத்தொட்டியும் உறைவிடமான தண்ணீர் தொட்டியின் நிழலும் கிடைக்காது என அவற்றின் மரபணுக்களில்
பதிந்துவிட்டது எனவே கூறலாம்.
தெருநாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு(?) என்ற திட்டத்தில்
மிக உறுதி உள்ளவன் நான். ஆனால் அதன் செயல்பாடு எந்த அளவுக்கு உருப்படியாக இருக்கிறது
என்றால் கடந்த பத்து வருடங்களாக தேரடித் தெருவை ஆண்டு வந்த வாலில் வெள்ளையும் முகத்தில்
கொஞ்சம் கருப்பும் கொண்ட பழுப்பு ராஜா மறைவுக்குப் பின் கண்ணில் கருப்பும் உடல் முழுவதும்
வெள்ளையும் கொஞ்சம் புசுபுசு வால் கொண்ட நாய் தேரடித் தெரு சக்ரவர்த்தியாக பதவி ஏற்று
கொண்டுவிட்டது.
ஒரு மனிதக் குழந்தை அனாதையாக விடப்பட்டால் சமூகத்தில்
எப்படி அவனால்/அவளால் வாழ முடியாதோ நாய்களும் அப்படித்தானே. பெற்ற நாய் இருக்கும் போது
எப்படி அனாதையாக இருக்க முடியும் என்று தர்க்கம் செய்பவர்கள் மனித ஆதரவு இல்லையென்றால்
இறைவனும் ஒரு அனாதையே.
மனிதன் பராமரிப்பு இல்லாமல் மனிதனால் உருவாக்கப்பட்ட
ஊர்களில் எப்படி நாய்களால் வாழ இயலும்? என்று உண்மையான மக்களிடம் அக்கறை உள்ள அரசு,
மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் அரசு நிர்வாகத்தை ஏற்கிறதோ அதுவரை இவர் போன்ற
அனாதைகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் போன்ற ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத ஓட்டப்பந்தய
வீரர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
பின் குறிப்பு: நாய்கள் பற்றி எனக்கு என்ன தெரியும் என்பவர்களுக்கு
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் வீட்டில் நாய்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
இப்பதிவை எழுதும் போது கூட இரு முறை பக்கத்து வீட்டு அழைப்பு மணிக்கு குரல் கொடுத்த
என் நான்கு கால் கொண்ட சகோதரனை அமைதிபடுத்தி விட்டுத் தான் எழுதினேன்.